'பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது' - ராணுவ மந்திரியின் பேச்சால் பரபரப்பு


பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது - ராணுவ மந்திரியின் பேச்சால் பரபரப்பு
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டதாக ராணுவ மந்திரியின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமாபாத்,

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு விரைவில் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவாலாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பேசியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது கவாஜா ஆசிப் இதுப்பற்றி கூறியதாவது:-

பாகிஸ்தான் திவாலாகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஏற்கனவே நடந்துவிட்டது. பாகிஸ்தான் திவாலாகிவிட்டது. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட அனைவரும் பொறுப்பு. நமது பிரச்சினைகளுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது. பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை. பாகிஸ்தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சொந்தக்காலில் நிற்பது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு கவாஜா ஆசிப் கூறினார்.


Next Story