பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிப்பு


பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிப்பு
x

தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

லாகூர்

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஆசிப் அலி சர்தாரி, பொதுச்செயலாளர் தாஜ் ஹைதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோவை, ஆசிப் அலி முன்மொழிந்தார். இதனை கட்சி செயற்குழு அங்கீகரித்துள்ளது. பிலாவல் பூட்டோ லாகூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிலாவல் பூட்டோ கூறும்போது, "பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் இரண்டு கட்சிகளும் ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகள். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு காண முடியவில்லை.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மட்டுமே எப்போதும் தேர்தலுக்கு முன் மக்களை முன்னுரிமையில் வைத்து அதன் தொலைநோக்கு பார்வை மற்றும் தேர்தல் அறிக்கையை கொண்டு வருகிறது" என்று கூறினார்.


Next Story