இஸ்ரேல் சிறையில் 86 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவன் உயிரிழப்பு - ஏவுகணை தாக்குதல்


இஸ்ரேல் சிறையில் 86 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவன் உயிரிழப்பு - ஏவுகணை தாக்குதல்
x

இஸ்ரேலிய சிறையில் 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவன் உயிரிழந்தார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

அதேவேளை, ஹமாஸ் போன்று இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் (வயது 45). இவரை ஏற்கனவே 12 முறை இஸ்ரேல் கைது செய்துள்ளது. காதர் சுமார் 8 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன் காதரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீண்டும் கைது செய்தனர். அவர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது கைதை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக காதர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழக்கப்பட்ட மருத்துவ உதவியையும் காதர் ஏற்க மறுத்து கடந்த 86 நாட்களாக சிறையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தன்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறு காதர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில், 86 நாட்களாக உணவு சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்திய காதர் இன்று உயிரிழந்தார். இதை இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.

காதர் அதானென் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்ததையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் நோக்கி 10 ஏவுகணைகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். காசாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேற்குகரையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து காசா முனையில் பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இதனால், இஸ்ரேலுக்கும் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.


Next Story