அரசர் மூன்றாம் சார்லசின் லண்டன் மெழுகு சிலை மீது கேக்கை கொண்டு அடித்த நபர்கள்


அரசர் மூன்றாம் சார்லசின் லண்டன் மெழுகு சிலை மீது கேக்கை கொண்டு அடித்த நபர்கள்
x

லண்டனில் உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் மெழுகு சிலை மீது கேக்கை கொண்டு அடித்த நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.லண்டன்,


இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் மேடம் டுசாட்ஸ் என்ற பெயரில் மெழுகு சிலைகளின் அருங்காட்சியகம் உள்ளது. இதில், உலக அரங்கின் பிரபல தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உருவங்கள் மெழுகு சிலைகளாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், இங்கிலாந்தில் ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரசராக பதவியேற்று கொண்ட அரசர் மூன்றாம் சார்லசின் மெழுகு சிலை ஒன்றும் இடம் பெற்று உள்ளது. அதற்கு அருகே, ராணி கமீலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் கேத் மிடில்டன் ஆகியோரின் மெழுகு சிலைகளும் உள்ளன.

இந்த நிலையில், 2 பேர் சிலையை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் மளமளவென தங்களது மேல்சட்டையை கழற்றி விட்டு, தங்களது டி-சர்ட் தெரியும்படி நின்றனர். அதில், ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என எழுதப்பட்டு இருந்தது.

அவர்களில் இளம்பெண் ஒருவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த சாக்லேட் கேக் ஒன்றை எடுத்து அரசர் மூன்றாம் சார்லசின் மெழுகு சிலையில் முகத்தின் மீது அடித்துள்ளார். அடுத்து, அவருடன் வந்த மற்றொரு நபரும் இதேபோன்று சிலையின் முகத்தில் கேக்கை கொண்டு அடித்துள்ளார்.

ஜெர்மனியில் ஏறக்குறைய ரூ.750 கோடி மதிப்புடைய ஓவியம் மீது நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் சிலர் உருளை கிழங்குகளை துண்டு துண்டுகளாக்கி,கொண்டு வந்து அதன் மீது வீசி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். எனினும், ஓவியம் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், எந்த சேதமும் ஏற்படவில்லை.

அடுத்த சில நாட்களுக்குள் இந்த போராட்டம் நடந்து உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள், எண்ணெய் மற்றும் கியாஸ்சுக்கான அனைத்து புதிய உரிமங்களையும் ரத்து செய்யும்படி கோரி இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருவகால செயற்பாட்டாளர்களான அவர்கள், அப்படி நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.Next Story