பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி


பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Aug 2023 9:14 PM GMT (Updated: 24 Aug 2023 9:37 PM GMT)

15வது பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் சென்கிறார்.

தென் ஆப்பிரிக்கா,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்சி மாநாடு, தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 3 ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இம்மாநாடு, இந்த ஆண்டு நேரடியாக நடந்தது.

மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 'பிரிக்ஸ்' அமைப்பில் சேர 23 நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. எனவே, புதிய நாடுகளை சேர்த்து 'பிரிக்ஸ்' அமைப்பை விரிவாக்கம் செய்வதை ஆதரிப்பதாக மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில், புதிதாக 6 நாடுகளை சேர்க்க 'பிரிக்ஸ்' நாடுகளின் தலைவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. என்னென்ன தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை முடிவு செய்த பிறகு, 6 நாடுகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 3 நாள் மாநாடு நேற்று முடிவடைந்தது. தொடர்ந்து 15வது பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து விமானம் மூலம் கிரீஸ் சென்றார். கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

இதனிடையே கிரீஸ் சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்க ஏதென்ஸ் நகரில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் 'பாரத் மாதா கீ ஜெய்', 'வந்தே மாதரம்', மோடி ஜி ஜிந்தாபாத் என்று கோஷங்களை எழுப்பி அங்கு காத்திருந்தனர்.

முன்னதாக மாநாட்டின் இறுதியில், தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தபோது, தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா நிருபர்களிடம் இத்தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

'பிரிக்ஸ்' அமைப்பில், அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை சேர்க்க முடிவு செய்துள்ளோம். அந்த நாடுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 'பிரிக்ஸ்' உறுப்பினர்களாக செயல்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் அடிப்படையில் இந்த நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது முதல்கட்ட விரிவாக்க பணி. இதுபோல், இன்னும் சேர விரும்பும் நாடுகளின் பட்டியலை தயாரிக்கும் பணியை எங்கள் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுக்கு அளித்துள்ளோம். பிரிக்ஸ் அமைப்பில் சேர விரும்பும் பிற நாடுகளின் நலன்களை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, ஜோகன்னஸ்பர்க்கில், ஆப்பிரிக்க கண்டம் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

ஆப்பிரிக்க மண்ணில்தான் மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் அமைதி போராட்டம் என்ற வலிமையான வழிமுறைகளை பயன்படுத்தினார். அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை கவர்ந்தன.

இத்தகைய சரித்திர தொடர்பின் அடித்தளத்தில் நமது நவீன உறவுகளை மறுசீரமைத்துள்ளோம். 2063-ம் ஆண்டுக்குள், பொருளாதார வளர்ச்சி அடைய ஆப்பிரிக்க யூனியன் திட்டமிட்டுள்ளது. அந்த பயணத்தில் இந்தியா நம்பகமான, நெருக்கமான கூட்டாளியாக திகழும். பயங்கரவாதம், கடற்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்க முயன்று வருகிறோம் என்று அவர் பேசினார்.


Next Story