பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம்: ரஷிய அதிபர் புகழாரம்


பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம்:  ரஷிய அதிபர் புகழாரம்
x
தினத்தந்தி 13 Sep 2023 11:05 AM GMT (Updated: 13 Sep 2023 4:33 PM GMT)

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய அதிபர் புதின் புகழாரம் தெரிவித்து உள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்புக்கான நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, ஒரு காலத்தில் உள்நாட்டிலேயே தயாரான கார்கள் நம்மிடம் இல்லை. ஆனால், தற்போது உள்ளன. கடந்த 1990-ம் ஆண்டுகளில் நாம் அதிக அளவில் வாங்கிய மெர்சிடிஸ் அல்லது ஆடி கார்களை விட அவை நவீனத்துவம் வாய்ந்தவை.

ஆனால், இது ஒரு விசயம் இல்லை என கூறினார். பின்னர் அவர், நாம், நம்முடைய பல நட்பு நாடுகளை பார்த்து, அவர்களுடைய வெற்றிக்கான விசயங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா உள்ளது என கூறியுள்ளார். ரஷிய தயாரிப்பு கார்களை பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது, அவர் இந்த விசயங்களை கூறினார்.

தொடர்ந்து அவர், நாம் உள்நாட்டு தொழிற்சாலைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு இந்தியா போன்ற நாடுகளை பின்பற்ற வேண்டும். இந்தியாவில், மேக் இன் இந்தியா திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி சரியான விசயங்களை செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

இந்தியா, அவர்களுடைய தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அவர் சரியாக இருக்கிறார்.

நம்மிடம் ரஷியாவிலேயே உற்பத்தி செய்ய கூடிய ஆட்டோமொபைல்கள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். இது முற்றிலும் சரியாக இருக்கும். இது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை எந்த வகையிலும் மீறுவதற்கு வழிவகுக்காது என்றும் கூறியுள்ளார்.

இந்த பேச்சின்போது, இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ஆனது, ரஷியாவுக்கே பலன் தரும். எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும். இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்த கூடிய விசயம் என எதனையும் நான் பார்க்கவில்லை.

இந்த இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட (ஐ.எம்.இ.சி.) திட்டம், ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என்று கூறியுள்ளார்.

நம்முடைய நாட்டில், பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா பிரசாரம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் தொழில் முனைவோர்களை தயாரிப்பு பிரிவு மட்டுமின்றி பிற பிரிவுகளிலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story