பாகிஸ்தானில் ராணுவ காவலில் அரசியல் கட்சி தொண்டர்கள் சித்ரவதை செய்து படுகொலை


பாகிஸ்தானில் ராணுவ காவலில் அரசியல் கட்சி தொண்டர்கள் சித்ரவதை செய்து படுகொலை
x

பாகிஸ்தானில் துணை ராணுவ படையினரின் காவலில் இருந்த முத்தாகிட குவாமி இயக்க கட்சியின் 3 தொண்டர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொன்று வீசப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



கராச்சி,



பாகிஸ்தானில் முத்தாகிட குவாமி இயக்கம் என்ற பெயரிலான அரசியல் கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 3 தொண்டர்கள், அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர்.

அதன்பின்னர், கடந்த 7 ஆண்டுகளாக காணாமல் போயிருந்தனர். அவர்களை மீட்டு தரும்படி கோரி அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து கோர்ட்டுக்கு அலைந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இர்பான் பசாரத், அபித் அப்பாசி மற்றும் வாசீம் அக்தர் என்ற ராஜூ ஆகிய அந்த 3 பேரும் நேற்று உயிரிழந்து கிடந்தனர். அவர்களது உடல்கள் சிந்த் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களது உடல்களில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. 3 பேரும் துணை ராணுவ படையினரின் காவலில் விசாரிக்கப்பட்டு வந்தனர் என தெரிய வந்துள்ளது.

இவர்களில் இர்பான் பசாரத் சித்திக்கின் சகோதரி, கைது செய்யப்பட்ட தனது சகோதரரை காணவில்லை என்று சிந்த் ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக இர்பானின் சகோதரியை படையினர் மிரட்டியுள்ளனர்.

எப்.ஐ.ஆர். பதிவில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பெயர் இடம்பெற்றதன் தொடர்ச்சியாக மற்றொரு சகோதரரான இம்ரான் பஸ்ராத்தும், படையினரால் கைது செய்யப்பட்டார்.

பல ஆண்டுகளாக கோர்ட்டுக்கு இர்பானின் குடும்பத்தினர் சென்று நீதி கேட்டு வந்த நிலையில், இர்பான் உள்பட 3 பேர் கொடுமையான முறையில், சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டு உள்ளது அந்த பகுதி மக்களிடையே வருத்தம் மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பு குழு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், இனபடுகொலை என்றும் மற்றும் தொடர்ச்சியான தீவிர மனித உரிமை மீறல் எனவும் குற்றச்சாட்டு கூறியுள்ளது.


Next Story