இந்தோனேசியா தேர்தல்: வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோவோ


இந்தோனேசியா தேர்தல்: வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோவோ
x
தினத்தந்தி 15 Feb 2024 4:24 AM GMT (Updated: 15 Feb 2024 4:26 AM GMT)

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாதுகாப்புத்துறை மந்திரி பிரபோவோ முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜகார்த்தா,

உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தநிலையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக உள்ள பிரபோவோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு நேற்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை நிரூபிக்கப்படாத பட்சத்தில் 2-ம் கட்ட தேர்தல் ஜூனில் நடக்கும். இருப்பினும் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாதுகாப்புத்துறை மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் கருத்து கணிப்புகளில் பிரபோவோவே, 52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்ற பிரபோவோ, இந்தோனேசியாவின் புதிய அதிபராகும் வாய்ப்புகள் நிலவுகின்றன.

இதனிடையே நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்றன. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நேற்று இரவே பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ தான் வெற்றி பெற்றதாக மக்கள் முன்னிலையில் அறிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் " என்னதான் நாம் மக்களிடம் ஆதரவை பெற்றிருந்தாலும் கர்வத்துடன் நடக்கக் கூடாது. பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வெற்றி அனைத்து இந்தோனேசிய மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்" என்று கூறினார்.


Next Story