இலங்கை அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம்


இலங்கை அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம்
x

இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

கொழும்பு,

இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி இருந்தனர். இன்று காலை அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு காலை உணவு அதிபர் மாளிகைக்கு உள்ளே வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர்.

பெரும்பாலானவர்கள் அதிபர் மாளிகை அரங்குகளுக்குள் தரையில் சொகுசாக படுத்துக் கொண்டு டி.வி. பார்த்தபடி இருந்தனர். சிலர் அதிபர் மாளிகையில் என்னென்ன வசதிகள் இருப்பது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதுதான் அதிபர் மாளிகைக்குள் சுரங்க அறைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சுரங்க அறைகள் நவீன வசதிகளுடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிபர் மாளிகையின் சில அறைகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடைத்து திறந்து பார்த்தனர். அந்த அறைகளுக்குள் நகைகளும், பணமும் இருந்தன. ஒரு அறையில் கட்டுக் கட்டாக இலங்கை ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் ரூபாய் நோட்டுக்களை அந்த அறைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போராட்டக்காரர்கள் அந்த ரூபாய் நோட்டு கட்டுக்களை போட்டி போட்டு அள்ளினார்கள். பிறகு அவை எண்ணப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுக்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிறகு அந்த ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story