இலங்கையில் அதிபரும், பிரதமரும் பதவி விலக வலியுறுத்தி நாளை மாபெரும் போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டம்...!

இலங்கையில் பொருளாதாரத்தை சீர் செய்வதில் அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கொழும்பு,
பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று ஏறக்குறைய 2 மாதங்கள் ஆனாலும் இலங்கையில் நிலைமை சீரடையவில்லை. மாறாக, மேலும் மோசடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. மக்களின் நிலமையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் மாநாளை பெரும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டம் அதிபர் மாளிகை அருகில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.






