இலங்கையில் 'அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும்' - ரணில் விக்ரமசிங்கே உறுதி


இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும் - ரணில் விக்ரமசிங்கே உறுதி
x

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதிபட தெரிவித்து உள்ளார்.கொழும்பு,

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் எந்த பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிலவிய இந்த வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருமாறியது. அதிபர் மற்றும் பிரதமராக இருந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது.

இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரும் பதவி விலக நேரிட்டது. இதனால் ரணில் விக்ரமசிங்கே, கடந்த ஜூலை மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது.

ஆனால் புதிய அதிபருக்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்தி வரும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடும் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன.

இதைப்போல ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், எனவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இந்த கோரிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வரை முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை. போராட்டக்காரர்கள் என்னை சர்வாதிகாரி என்றும் அழைக்கலாம். ஆனால் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தவும், சாலை மறியலில் ஈடுபடவும் அவர்கள் நிச்சயம் போலீசாரிடம் அனுமதி வாங்கித்தான் ஆக வேண்டும்.

நாட்டில் மிகப்பெரிய அளவிலான மற்றுமொரு மக்கள் போராட்டத்துக்கு திட்டமிடுவதாக தெரிகிறது. ஆனால் அதை நான் அனுமதிக்கமாட்டேன். அப்படி போராட்டங்கள் நடத்த முயற்சித்தால் ராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை ஒடுக்குவேன்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இலங்கை அதிபரின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story