சீனாவில் கனமழைக்கு 33 பேர் பலி..!
சீனாவில் கனமழைக்கு 33 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஜிங்,
சீனாவின் மலைப்பாங்கான மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. மேலும் டோக்சுரி புயலின் கோர தாண்டவத்தால் 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. ஒரு சில நாட்களில் 70 செ.மீட்டருக்கும் அதிகமாக மழைபொழிவு பதிவாகி பொதுமக்களை பயமுறுத்தியது. பீஜிங், ஹெபெய், தைஜான் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாகின.
பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலை பாலங்கள் உடைந்தன. ரெயில் தண்டவாளங்கள் நீரில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை அடியோடு பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையில் சிக்கி இதுவரை 33 பேர் பலியானதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்புத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.