ராக்கெட் வீச்சுக்கு பதிலடி; தெற்கு லெபனான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்


ராக்கெட் வீச்சுக்கு பதிலடி; தெற்கு லெபனான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
x
தினத்தந்தி 16 Nov 2023 5:51 PM GMT (Updated: 16 Nov 2023 9:44 PM GMT)

இஸ்ரேலிய பகுதியில் உள்ள பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள், தெற்கு லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்டன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, வடக்கு இஸ்ரேலின் மிஸ்காவ் ஆம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிதுலா மற்றும் கிப்புஜ் யிப்தா பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என கூறியது. எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து, ராக்கெட் தாக்குதல் நடத்திய பகுதிகளை நோக்கி இஸ்ரேல் பாதுகாப்பு படை குண்டுமழை பொழிந்தது. இஸ்ரேலிய பகுதியில் உள்ள பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள், தெற்கு லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்டன. இதனால், அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலை தொடுத்துள்ளது.


Next Story