எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!! கொரோனா தடுப்பூசி பிரசார செலவால் இந்தியாவுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்: அமெரிக்கா அறிக்கை


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!! கொரோனா தடுப்பூசி பிரசார செலவால் இந்தியாவுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்:  அமெரிக்கா அறிக்கை
x

கொரோனா தடுப்பூசி செலுத்தி (உழைக்கும் வயதுடைய பிரிவினர்), அதனால் காப்பாற்றப்பட்ட நபர்களால் கிடைத்த ஒட்டுமொத்த வாழ்நாள் வருவாய் ஆனது, ரூ.1.78 லட்சம் கோடி ஆகும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.



வாஷிங்டன்,


கொரோனா பெருந்தொற்று பரவலால் உலக நாடுகள் 3 ஆண்டுகளாக திணறி வருகின்றன. பெருந்தொற்று பரவலின்போது, இந்தியா சார்பில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மனிதநேயம் சார்ந்த உதவியாக பல டன்கள் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கு, உதவியை பெற்று கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நன்றி தெரிவித்து கொண்டன. இந்தியாவிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த பரவலால், உலக நாடுகளின் பொருளாதாரம் பெருமளவில் சரிந்தது. அதில் இருந்து மெல்ல மீட்சி அடைந்து வர முயன்று வருகிறது. எனினும், இந்தியாவில் பொருளாதார மீட்சி விரைவாக நடந்து வருகிறது என உலக நாடுகளின் பார்வை உள்ளது.

இந்நிலையில், இதுபற்றி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை கழகம் மற்றும் போட்டி திறனுக்கான மையம் சார்பில் கூட்டாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

பொருளாதார ஆற்றுப்படுத்துதல்: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தொடர்புடைய விவகாரங்களால் ஏற்பட்ட பொருளாதார மதிப்பு பற்றிய மதிப்பீடு என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பூசி பிரசார நடவடிக்கைகளால், 34 லட்சம் பேரின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

அதனுடன், ரூ.1.51 லட்சம் கோடி இழப்பை தடுத்து பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான சாதக அமைப்பையும் ஏற்படுத்தி தந்தது. இந்த கொரோனா தடுப்பூசி பிரசார செலவை கணக்கிட்டால், இந்தியாவுக்கு மொத்தம் ரூ.1.27 லட்சம் கோடி லாபம் கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால் தடுப்பூசி பிரசாரத்திற்கான செலவு போக, மீதம் கிடைத்த லாப தொகை குறிப்பிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி (உழைக்கும் வயதுடைய பிரிவினர்), அதனால் காப்பாற்றப்பட்ட நபர்களால் கிடைத்த ஒட்டுமொத்த வாழ்நாள் வருவாய் ஆனது, ரூ.1.78 லட்சம் கோடி ஆகும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் (கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு), அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு செலுத்தப்பட்டதுடன், சுகாதார நலன் திட்டங்களின் சுமையையும் பெருமளவில் குறைத்து உள்ளது என அந்த கூட்டறிக்கை தெரிவிக்கின்றது.

சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவினருக்கு ஆதரவான அரசின் நல திட்ட உதவிகளால் இந்த துறை சார்ந்த 1.02 கோடி பேர் பயன் பெற்று, ரூ.8.29 லட்சம் கோடி பொருளாதார லாபம் (4.9 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி) கிடைத்து உள்ளது.

அரசின், பிரதம மந்திரி கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் இலவச உணவு தானிய வினியோகங்களால், 80 கோடி மக்கள் பயன்பெற்று, அதன் விளைவாக ரூ.215.6 கோடி லாபமும், பிரதம மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டங்களால் 40 லட்சம் பயனாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று அதனால், ரூ.3.98 லட்சம் கோடி பொருளாதார இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாக நடவடிக்கைகள் உதவி செய்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை, அரசின் அணுகுமுறையை ஒப்பு கொண்டு உள்ளது என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசும்போது குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story