காசா முனை கட்டமைப்புக்கு ரூ.40,859 கோடி மதிப்பிலான திட்டம்: இஸ்ரேல் ஒப்புதல்


காசா முனை கட்டமைப்புக்கு ரூ.40,859 கோடி மதிப்பிலான திட்டம்:  இஸ்ரேல் ஒப்புதல்
x

ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின், 4-ல் மூன்று பங்கு நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டு இருந்த காய்கறிகள் அமைந்த பண்ணை பகுதி அழிக்கப்பட்டது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கிலான குடிமக்கள் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மக்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், காசா முனையை அடுத்துள்ள பகுதியில் சமூக கட்டமைப்பை மேற்கொள்வதற்கான பணிகளுக்காக ரூ.40 ஆயிரத்து 859 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இஸ்ரேல் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த பகுதியை 5 ஆண்டு காலத்தில் (2024-2028) மறுசீரமைப்பதற்கான நோக்கில் இந்த நிதியை ஒதுக்குவது என முடிவாகி உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, போரின் தொடக்கத்தின்போது, காசா முனைக்கு அடுத்துள்ள பகுதியில் மறுசீரமைப்புக்கான அமைப்பை நாங்கள் நிறுவினோம். சமூகங்களை மீண்டும் கட்டமைப்பதற்காக ஒரு பெரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டை நாங்கள் அளித்திருக்கிறோம்.

ஒருவரும் விடுபட்டு விட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என அவர் கூறியுள்ளார். இந்த பகுதியில் மக்கள் தொகை வளர்ச்சியுடன் கூடிய புதுப்பித்தல் மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ல் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலின், 4-ல் மூன்று பங்கு நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டு இருந்த காய்கறிகள் அமைந்த பண்ணை பகுதி அழிக்கப்பட்டது. 20 நகரங்கள் மற்றும் பண்ணை சமூகங்கள் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன.


Next Story