ரஷிய ஓட்டலில் குண்டு வெடிப்பு - உக்ரைன் மீது குற்றச்சாட்டு


ரஷிய ஓட்டலில் குண்டு வெடிப்பு - உக்ரைன் மீது குற்றச்சாட்டு
x

ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான போரை ரஷியர்களில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வரும் அதே வேளையில், ஒரு சில ரஷியர்கள் போரை தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் புதினுக்கும், அவரது அரசுக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த புகழ்பெற்ற ராணுவ வலைப்பதிவரான விளாட்லன் டாடர்ஸ்கி போர் தொடங்கியதில் இருந்து ரஷிய படைகளின் செயல்பாடுகளை ஆதரித்து இணையத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். மேலும் அவர் ரஷியா மற்றும் உக்ரைனில் பிரிவினைவாத சக்திகளின் பிரசாரகராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ரஷியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் விளாட்லன் டாடர்ஸ்கி பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் விளாட்லன் டாடர்ஸ்கியிடம் கேள்விகளை கேட்க அவர் அதற்கு பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

குண்டு வெடிப்பில் சிக்கி விளாட்லன் டாடர்ஸ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் விளாட்லன் டாடர்ஸ்கியின் மார்பளவு சிலையை அவருக்கு பரிசாக வழங்கியதாகவும், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருவதாகவும், அவர் ஏற்கனவே போருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் ரஷியாவின் பிற ராணுவ வலைப்பதிவர்களும், தேசபக்தி ஆர்வலர்களும் உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் உக்ரைன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.


Next Story