உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன - ரஷியா அதிர்ச்சி தகவல்!


உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன - ரஷியா அதிர்ச்சி தகவல்!
x

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவை ரஷிய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன.

இதனிடையே, வியன்னாவில் நடைபெற்ற ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில், ரஷியா பங்கேற்றது.

அங்கு ரஷிய தரப்பில் அனுப்பப்பட்டுள்ள தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும், சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவை ரஷிய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.

ரஷிய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், "உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று எச்சரித்தார்.

மேலும், அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இப்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரேனிய நெருக்கடிக்கு தீர்வு காண சுத்தமாக எந்த ஒரு முயற்சியையும் செய்யவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷியா ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவர்கள் இன்னும் வலிமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் தங்களை நினைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.


Next Story