ரஷியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பலி


ரஷியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பலி
x

ரஷியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியாகினர்.

சட்டவிரோதமாக இயங்கியது

ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. 2 மாடி கட்டிடத்தில் செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் ஏராளமான முதியவர்கள் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 தளங்களிலும் பரவிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் முதியவர்கள்

நள்ளிரவு நேரம் என்பதால் முதியவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டபோது அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இதனிடையே இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

22 பேர் உடல் கருகி பலி

தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க அவர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இதனால் தீயை அணைக்கும் பணிகள் விடியவிடிய தொடர்ந்தது. நேற்று காலையில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேலும் 6 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பொழுதுபோக்கு மையத்தில்...

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு இதே கெமரோவோ நகரில் செயல்பட்டு வந்த பொழுதுபோக்கு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதும், அதில் 37 குழந்தைகள் உள்பட 60 பேர் உடல் கருகி பலியானதும் நினைவு கூரத்தக்கது.


Next Story