உக்ரைன் சுதந்திர தினத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா திட்டம்- அமெரிக்கா


உக்ரைன் சுதந்திர தினத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா திட்டம்- அமெரிக்கா
x

உக்ரைனின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் ரஷியா தாக்குதல்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

முடிவின்றி நீளும் போர்

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வந்தது.

ஆனால் தனது அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவது தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்லை ஏற்படுத்தும் என கருதி ரஷியா இதை கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்த விவகாரத்தில் ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் போராக வெடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது.

மிக குறுகிய காலத்தில் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என கருதி ரஷியா போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவின்றி நீண்டு கொண்டு இருக்கிறது.

உக்ரைன் சுதந்திர தினம்

அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷிய போர் இன்றுடன் 6 மாதங்களை நிறைவு செய்கிறது. இந்த 6 மாத கால போரில் உக்ரைனின் எண்ணற்ற நகரங்களை ரஷிய படைகள் சின்னபின்னமாக்கி விட்டன.

போரின் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தாலும், தாய் நாட்டை விட்டு வெளியேற விரும்பாத பல லட்சம் மக்கள் உக்கிரமான போருக்கு நடுவே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கையை வாழ அவர்கள் பழகி விட்டனர்.

போரின் 6-வது மாதத்தை நிறைவு செய்யும் இன்று உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதையொட்டி ரஷியா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்றும், எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை

இந்த நிலையில் உக்ரைன் சுதந்திரமான இன்று உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷிய ராணுவம் வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இன்னும் உக்ரைனில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் கூட தடை

இதுபற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் முழுவதும் பாதுகாப்பு நிலைமை மிகவும் நிலையற்றது. நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்பதால் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் தரைவழி போக்குவரத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற தூதரகம் கேட்டுக்கொள்கிறது" என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷிய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் சுதந்திர தின பேரணிகள், கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை நடத்த உக்ரைன் அரசு தடைவிதித்துள்ளது.


Next Story