உக்ரைன், ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்து


உக்ரைன், ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்து
x

Image Courtacy: ANI

உக்ரைனும் ரஷியாவும் கருங்கடல் துறைமுகங்களை தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அங்காரா,

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இந்த போரினால் உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்வதை ரஷியா தடுத்து வைத்துள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இதுமட்டுமின்றி பொருட்கள் வந்து சேருவதற்கு பெரும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கருங்கடல் பகுதியை திறந்து விட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. போருக்கிடையே கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு திறந்து விடுவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது.

கருங்கடல் அடைக்கப்பட்டதால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நாடு துருக்கி. இதனால் இருதரப்பையும் பேசி ஒப்பந்தம் செய்ய துருக்கி மிகவும் ஆர்வம் காட்டியது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில் துருக்கி மற்றும் ஐ.நா அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில் உக்ரைன் மற்றும் ரஷிய தரப்பின் ராணுவப் பிரதிநிதிகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது உணவு ஏற்றுமதி தடையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் முதற்கட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் உள்ள ஒடெசா, பிவ்டென்னி மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய மூன்று துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி நடைபெற ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் அவற்றை பல துறைமுகங்களுக்கு விரிவுபடுத்த ஒப்புகொள்ளப்பட்டது. ரஷியாவின் அச்சுறுத்தல் தொடரும் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த ஏற்றுமதி ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது,

இந்நிலையில் உக்ரைனும் ரஷியாவும் கருங்கடல் துறைமுகங்களை தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன.

தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் இஸ்தான்புல்லில் அதிபர் எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.


Next Story