"அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியது மிகப்பெரிய தவறு" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியது மிகப்பெரிய தவறு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அணு ஆயுத இருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் அணு ஆயுத (நியூ ஸ்டார்ட்) ஒப்பந்தத்தை கடந்த 2010-ம் ஆண்டு செக் குடியரசில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் தலா 1,550 அணு குண்டுகள் வரை வைத்திருக்க உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இவற்றை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பல், குண்டு வீச்சு விமானம் ஆகியவற்றில் பொருத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலமாக உலகளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதின் பேசியதாவது;-

"உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் போதும் இந்தப் போரை கைவிட மாட்டோம். அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்) ரஷ்யா விலகுகிறது.

நமது அணு ஆயுத பலத்தைப் பறிக்க ஐரோப்பா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இனி அமெரிக்கா அணு ஆயுத சோதனை மேற்கொண்டால் நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்" என்று புதின் தெரிவித்தார்.

இந்த நிலையில், புதினின் முடிவு பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இது பொறுப்பான செயல் அல்ல. எனினும் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story