சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கு; உணவு, மருத்துவ உதவி பெற கையேந்தும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள்


சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கு; உணவு, மருத்துவ உதவி பெற கையேந்தும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள்
x

சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கால் உணவு, மருத்துவ உதவிக்கு மக்கள் அரசை கையேந்த கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.



பீஜிங்,



சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக அதனை அந்நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற நாடுகள் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் சிக்கி தவித்து வருவதுடன், கொரோனா ஊரடங்கை நீட்டித்து வந்தன.

உலக நாடுகளில் கொரோனா பரவிய முதல் ஆண்டில் சீனா அதில் இருந்து விடுபட்டு இருந்தது. ஊரடங்கில் தளர்வுகளையும் அறிவித்தது.

பிற நாடுகளில் பல அலைகளை கடந்து தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வர கூடிய சூழலில், சீனாவில், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டன.

இதனால், சீனாவில் மக்கள் வீடுகளிலேயே இருக்க கூடிய நிலை ஏற்பட்டது. இதுபற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கட்டுப்பாடுகளால் சீன மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

இதனால், அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையில் உள்ள குறைந்த அளவு சேமிப்புகளை கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று 949 என்ற மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா பாதிப்புகள் உறுதியாகின. ஆனால், சமீபத்தில் தென்மேற்கு கையாங் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் கடந்த 5-ந்தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இதனால், சீனர் ஒருவர் அந்நாட்டின் வெய்போ சமூக ஊடகத்தில், அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளும் மற்றும் சிறு கடைகளும் கூட மூடப்பட்டு விட்டன. எங்களால் மளிகை பொருட்களை வாங்க முடியவில்லை.

ஆன்லைன் வழியே ஷாப்பிங் செய்ய கூடிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட தளங்களிலும் மளிகை பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதனால், நீங்கள் உணவு பொருட்களை வாங்க முடியாது அல்லது வீடுகளுக்கு வந்து வினியோகம் செய்வதனையும் பெற முடியாது என வேதனை தெரிவித்து உள்ளார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கடுமையான கொரோனா கொள்கையால் பீஜிங் போன்ற நகரங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா தொற்றிலா முடிவுகளை பெறும் குடியிருப்புவாசிகள், உணவு விடுதிகள், கட்டிடங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

இதனால், வீடுகளிலேயே முடங்கி கிடக்கிற சீன மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளான உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை கூட பெற முடியாமல் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story