அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை


அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை
x

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியா கடன்

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அண்டை நாடான இலங்கைக்கு முதல் நபராக இந்தியா கைகொடுத்தது. இதுவரை மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு இந்தியா கடன் கொடுத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களாகவும், உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களாகவும் இந்த கடனை அளித்துள்ளது.

சர்வதேச நிதியத்திடம் இலங்கை கடன் பெறுவதற்கு முதல் நபராக இந்தியா கடன் உத்தரவாதம் அளித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 600 கோடி கடனில் முதல் தவணையை கடந்த வாரம் இலங்கை பெற்றுக்கொண்டது.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில், இந்தியாவிடம் இலங்கை மேலும் 1 பில்லியன் டாலர் (ரூ.8 ஆயிரத்து 200 கோடி) கடன் கேட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய நிதி அமைச்சக அதிகாரிகளுடன் இலங்கை நிதி அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்த கடனை இலங்கை கேட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசாமி, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் இதை தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த ஆண்டு இந்தியாவிடம் பெற்ற 1 பில்லியன் டாலர் கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்குமாறு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குமாரசாமி கூறினார்.


Next Story