இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே நாளை இந்தியா வருகிறார்


இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே நாளை இந்தியா வருகிறார்
x

கோப்புப்படம்

2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே நாளை இந்தியா வருகிறார்.

கொழும்பு,

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

'இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 20, 21-ந்தேதிகளில் (நாளை, நாளை மறுதினம்) அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அவரது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றுவதையும், உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது' என்று அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபராக அவர் பொறுப்பேற்ற பின்பு, முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் செய்கிறார். சுற்றுப்பயணத்தின்போது விக்கிரமசிங்கே, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுடனும் இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்.

இலங்கை, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது பதவியேற்ற அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு உதவிகளை பெற்றார். சர்வதேச நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கவும் இந்தியா சம்மதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொது பணமாக பயன்படுத்த விரும்புவதாக விக்கிரமசிங்கே சமீபத்தில் கூறியிருந்தது நினைவூட்டத்தக்கது.


Next Story