சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...


சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...
x

சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜெட்டா,

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது.

இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகிறது. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானங்கள் இரண்டும், 2 கடற்படை கப்பல்களும் இதற்காக சென்று உள்ளன.

இதில், ஐ.என்.எஸ். சுமேதா கடற்படை கப்பலில் சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு 528 இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். ஜெட்டா வந்தடைந்த இந்தியர்களில் ஒருவர் கூறும்போது, எங்கள் நிறுவனம் அருகே துணை ராணுவ படையினர் வந்தனர். திங்கட் கிழமை காலை 9 மணியளவில் உள்ளே நுழைந்த அவர்கள் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

எங்களது பொருட்களை எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்தனர். எங்களை 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்தனர். சாப்பிடுவதற்கும் எதுவும் இல்லை.

கோப்புகள் உள்பட எல்லாவற்றையும் அவர்கள் அழித்து விட்டனர். லேப்டாப்புகள், மொபைல் போன்களை திருடி கொண்டனர். ஏ.சி. ஜன்னலுக்கு பின்னால் ஒளித்து வைத்ததில் எனது மொபைல் போன் திரும்ப எனக்கு கிடைத்தது.

துப்பாக்கி சூடு தொடர்ந்த நிலையில், தூதரக அதிகாரிகளால் அதிகம் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் பாதுகாப்புடன் இருக்கும்படி எங்களிடம் கூறினர்.

இதன்பின் அவர்களிடம் இருந்து விடுபட்டு, கிராமத்தில் தஞ்சமடைந்தோம். பின்பு வேறொரு கிராமத்திற்கு சென்று தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். அதன்பின் தலா 50 பேர் என 6 பஸ்களில் முதல் கட்டத்தில் நாங்கள் வெளியேறினோம்.

சூடான் துறைமுகத்தில் இந்தியர் ஒருவர் எங்களுக்கு உணவு வழங்கினார். இந்திய கடற்படையினர் வந்ததும் எங்களை மீட்டு சென்றனர். நாங்கள் எதுவும் கொண்டு வரவில்லை என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். இதேபோன்று மற்றோர் இந்தியர் கூறும்போது, 2 நாட்களாக எங்களுக்கு உணவு இல்லை என வேதனையுடன் கூறினார்.

சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் வரை சிக்கி உள்ளனர் என கூறப்படுகிறது. ஐ.நா. சபையின்படி, 459 பேர் உயிரிழந்தும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.


Next Story