ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் ரூபாய்களுக்கு தடை- தலீபான்கள் திடீர் உத்தரவு..!!


ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் ரூபாய்களுக்கு தடை- தலீபான்கள் திடீர் உத்தரவு..!!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 3 Oct 2022 1:06 PM GMT (Updated: 3 Oct 2022 1:07 PM GMT)

பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டாக தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு பாகிஸ்தான் ரூபாய்களுக்கு திடீர் தடை விதித்து தலீபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து வெளியான தலீபான் புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் நிதி பரிவர்த்தனைகளில் பாகிஸ்தானிய ரூபாயைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண பரிமாற்ற விநியோகஸ்தர்கள் மட்டும் ரூ.5,00,000 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் உள்ளூர்வாசிகளும் வர்த்தகர்களும் பாகிஸ்தானிய ரூபாயை அன்றாட செலவினங்களுக்காக பயன்படுத்தும் நேரத்தில் இந்த நடவடிக்கையை தலீபான்கள் எடுத்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் காபூலில் பதுங்கியிருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாடு அனுமதிப்பதாக தலீபான்கள் குற்றம்சாட்டினர்.

இதற்காக பாகிஸ்தான் பெரும் தொகையைப் பெற்றுள்ளதாக தலீபான்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Next Story