ஸ்பெயினில் பயங்கரவாத நடவடிக்கைகள்; பாகிஸ்தானியர்கள் 14 பேர் கைது


ஸ்பெயினில் பயங்கரவாத நடவடிக்கைகள்; பாகிஸ்தானியர்கள் 14 பேர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2023 6:22 AM GMT (Updated: 9 Nov 2023 6:40 AM GMT)

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருந்துள்ளனர்.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில், தேசிய காவல் துறையினர் கடந்த மாதம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தொடங்கி விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், சந்தேகத்திற்குரிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

ஸ்பெயினின் பார்சிலோனா, மேட்ரிட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்களது இயக்கத்தின் கொள்கைகளுக்காக ஆள் சேர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபரில், தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, ஸ்பெயினில் பயங்கரவாத ஒழிப்புக்கான எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொது தகவல் ஆணையரகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், மொத்தம் 14 பேர் வரை பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. கடலோனியா, வேலன்சியா, கைபுஜ்கோவா, விடோரியா, லாக்ரோனோ மற்றும் லெய்டா ஆகிய நகரங்களில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

எனினும், இவர்கள் ஆன்லைன் வழியே ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு, பயங்கரவாதம் உள்ளிட்ட வன்முறைகளை பரப்பும் நோக்கில் தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இவர்கள் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story