பயங்கரவாத தாக்குதல்; இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்


பயங்கரவாத தாக்குதல்; இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்
x
தினத்தந்தி 7 Oct 2023 9:12 PM GMT (Updated: 8 Oct 2023 12:31 AM GMT)

இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கான முழு ஆதரவை உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமரின் எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியான செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இஸ்ரேலுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமைக்கு முழு அளவில் ஆதரவளிக்கிறோம் என்றும் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பைடனின் இந்த முழு ஆதரவுக்கு நேதன்யாகுவும் நன்றி தெரிவித்து கொண்டார். இஸ்ரேல் வெற்றி பெறுவதற்கான ஒரு கட்டாய, நீண்டகால பிரசாரமும் தேவை என நேதன்யாகு தெளிவுப்படுத்தி உள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அதிபர் பைடன் எக்ஸ் சமூக ஊடக பதிவின் வழியே கண்டனம் தெரிவித்து உள்ளார். இதேபோன்று, அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனும் கண்டனம் வெளியிட்டு உள்ளார்.


Next Story