எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை கைவிட ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்


எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை கைவிட ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
x

எண்ணெய், எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர, சுமார் 300 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

பிரசல்ஸ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 300 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டு முயற்சியானது, இந்த ஆண்டு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷிய புதைபடிம எரிபொருட்களை கைவிடுவதற்கான ஒரு தொடக்கம் என்று அவர் கூறியுள்ளார். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 40 சதவீத இயற்கை எரிவாயு, 30 சதவீத எண்ணெய் மற்றும் சுமார் 20 சதவீத நிலக்கரி ரஷியாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஆற்றல் நுகர்வுச்சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ரஷியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியின் முக்கிய விநியோகஸ்தரான ரஷியாவின் 10 பில்லியன் டாலர் வருவாயை இழக்கச் செய்வதே இதன் இலக்கு என உர்சுலா வான் டெர் லெயன் கூறியுள்ளார்.


Next Story