தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டும்; செக் வைத்த இம்ரான் கான்


தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டும்; செக் வைத்த இம்ரான் கான்
x

பாகிஸ்தானுக்கு ஏதேனும் புதிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு, தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என இம்ரான் கான் கோரியுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் நாடு பொருளாதார சரிவால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன் முடிவில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இந்த சூழலில், இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் (92 இடங்கள்) வெற்றி பெற்றனர். எனினும், அவர்கள் ஆட்சியமைக்க முடியாத சூழலே உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி (79 இடங்கள்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (54 இடங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலில், நாட்டில் ஒரு வலிமையான அரசை அமைப்பதற்கான முயற்சியில் அந்த இரு கட்சிகளும் இறங்கின. கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அதில் பலன் கிடைத்துள்ளது.

இரு கட்சிகளின் தலைவர்களும், தேசத்தின் சிறந்த நலனுக்காக, என கூறி கூட்டணி அரசை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் (வயது 72) புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான சர்தாரி (வயது 68) நாட்டின் புதிய அதிபராகவும் வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ப இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தானுக்கு ஏதேனும் புதிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு, தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில், இதுபோன்ற சூழலில், நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டால், அதனை திருப்பி செலுத்துவது யார்? என கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடனானது, வறுமையை இன்னும் அதிகரிக்க வழிவகுப்பதுடன், நாட்டின் மீது சுமையை கூடுதலாக ஏற்றும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் ஆர்வம் தெரிவித்து உள்ளது என்றும், இம்ரான் கானுடைய கோரிக்கையை புறந்தள்ளி விட்டது என்றும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதி மந்திரியான இஷாக் தர் கூறும்போது, தனிப்பட்ட லாபத்திற்காக எதனையாவது எழுதுவது என்பது வெட்கக்கேடானது. பி.டி.ஐ. நிறுவனரின் கடிதத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை என கூறினார்.


Next Story