இருவேறு இடங்களில் சீனாவில் சூறாவளி தாக்குதலுக்கு 10 பேர் பலி


இருவேறு இடங்களில் சீனாவில் சூறாவளி தாக்குதலுக்கு 10 பேர் பலி
x

சீனாவில் தொடர் சூறாவளி தாக்குதல் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.

பிஜிங்,

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவில் கிழக்கு ஜியான்க்சு மாகாணத்தின் சுகியான் நகரில் மையம் கொண்டு சூறாவளி புயல் ஒன்று உருவானது. இதனால் தரைக்காற்று எழும்பி மணிக்கு 240 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று சுழன்றடித்தது. இதனை தொடர்ந்து சுமார் 1½ மணிநேர இடைவேளையில் சுகியான் நகரில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள யான்செங் நகரில் 2-வதாக சூறாவளி ஒன்று உருவாகி சுழற்றி அடித்தது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இந்த சூறாவளி வீசியது.

10 பேர் பலி

ஒரேநாளில் அடுத்தடுத்து 2 சூறாவளி தாக்கியதால் ஜியான்க்சு மாகாணம் சின்னாபின்னமானது. இந்த புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி புயலில் சிக்கி 200-க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகின. மேலும் பன்றி வளர்ப்பு கொட்டகைகள், கோழி பண்ணைகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு கட்டிடங்கள் நொறுங்கின. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வைரலாகும் வீடியோ

சூறாவளி தாக்கி இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் உயிருக்கு பயந்து பொதுமக்கள் ஓடுவதையும் பின்னால் சூறாவளி காற்று எழும்பி துரத்துவதையும், புயலின் மையத்தில் கார் போன்ற வாகனங்கள், கட்டிட இடிபாடுகள் சுழல்வதும் தெரிகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதனிடையே சூறாவளியால் பாதிக்கப்பட்ட நகரங்களில் தேவையான உதவிகள் வழங்கும் வகையில் மாகாண கவர்னர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் சூறாவளிகாற்று என்பது அரிதான நிலையில் இந்த இயற்கை பேரிடரினால் சீன மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.


Next Story