'இந்து மத நம்பிக்கை என்னை வழிநடத்துகிறது' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சு


இந்து மத நம்பிக்கை என்னை வழிநடத்துகிறது - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சு
x

கோப்புப்படம்

இந்து மத நம்பிக்கை தன்னை வழிநடத்துவாதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மிக போதகர் மொராரி பாபுவின் `ராம் கதா' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்திய சுதந்திர தினமான நேற்று முன்தினம் `ராம் கதா' நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்திய சுதந்திர தினத்தன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், மொராரி பாபுவின் 'ராம் கதா' நிகழ்ச்சியில் இருப்பது உண்மையிலேயே பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இன்று நான் ஒரு பிரதமராக அல்லாமல், ஓர் இந்துவாக இங்கு நிற்கிறேன். மொராரி பாபுவுக்குப் பின்னால் இருக்கும் தங்க ஆஞ்சநேயர் படத்தைப்போல, என் மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, என்னுடைய நம்பிக்கை என்பது தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது. பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றாலும்கூட, அது எளிதான வேலையல்ல. கடினமான விஷயங்களை எதிர்கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், என்னுடைய இந்து நம்பிக்கை எனக்கு மிகுந்த தைரியத்தையும், நம் நாட்டுக்கு என்னால் இயன்றதைச் செய்ய உறுதியையும் தருகிறது.

என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவோடு ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என்று ரிஷி சுனக் பேசினார்.

ரிஷி சுனக் தனது பேச்சை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் 'ஜெய் ஸ்ரீராம்' என கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story