#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு


#லைவ் அப்டேட்ஸ்:  மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 9 Jun 2022 3:59 AM GMT (Updated: 9 Jun 2022 1:26 PM GMT)

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார்.


Live Updates

  • 9 Jun 2022 12:29 PM GMT

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 22-ம் தேதி போர் தொடங்கியது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது முதல் ரஷியா மீது 46 நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. 

  • சிவிரோடொனெட்ஸ்க் நகரில் உள்ள 10 ஆயிரம் பேரை வெளியேற்றுவது கடினம்; மேயர்
    9 Jun 2022 9:17 AM GMT

    சிவிரோடொனெட்ஸ்க் நகரில் உள்ள 10 ஆயிரம் பேரை வெளியேற்றுவது கடினம்; மேயர்



    உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகரில் தொழில் மண்டலம் மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைனிய படைகள் இன்னும் கட்டுக்குள்ளேயே வைத்துள்ளன என அதன் மேயர் அலெக்சாண்டர் ஸ்டிரையுக் கூறியுள்ளார். நிலைமை கடினம் என்றாலும் அதனை நிர்வகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

    ரஷிய படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டபோதும், பாதுகாப்பு படைகள் கட்டுக்குள்ளேயே நகரை வைத்துள்ளன. எனினும், சிவிரோடொனெட்ஸ்க் நகரில் உள்ள மக்களை வெளியேற்றுவது என்பது தற்போது சாத்தியமற்றது.

    நகரில் 10 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இதனையே தாக்குதலுக்கான முக்கிய இலக்காக ரஷியா கொண்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

  • ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
    9 Jun 2022 8:09 AM GMT

    ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

    ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை நீடிப்பது லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலக நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டு வரும் சூழலில், அது பிற வளர்ச்சி அடையாத நாடுகளை கடுமையாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பு எச்சரித்து இருந்தது.

    இது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எரிபொருள் விலை உயர்வு சுட்டி காட்டப்படுகிறது.

    இந்த சூழலில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியா தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால், துறைமுகங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதுபற்றி ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் இன்று ஆற்றிய உரை ஒன்றில், ரஷியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமென்றால், லட்சக்கணக்கானோர் பசி, பஞ்சத்திற்கு ஆளாவார்கள் என கூறியுள்ளார். உக்ரைனால், கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  • சர்வதேச நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறி உக்ரைனுக்கு வாருங்கள்:  அதிபர் ஜெலன்ஸ்கி
    9 Jun 2022 6:13 AM GMT

    சர்வதேச நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறி உக்ரைனுக்கு வாருங்கள்: அதிபர் ஜெலன்ஸ்கி



    அமெரிக்காவின் யேல் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகள் மட்டத்திலான வர்த்தக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கியும் காணொலி காட்சி வழியே இணைந்து கொண்டார்.

    கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது அவரிடம், உக்ரைனுக்கு தற்போது உதவ மற்றும் போருக்கு பின்னான மீட்சி நடைமுறைக்கு உதவ, சர்வதேச வர்த்தக தலைவர்கள், குறிப்பிடும்படியாக அமெரிக்க தலைவர்கள் என்ன செய்ய முடியும்? என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜெலன்ஸ்கி பதிலளித்து பேசினார்.

    அவர் கூறும்போது, சர்வதேச வர்த்தக சமூக உறுப்பினர்களின் நிறுவனங்கள் உடனடியாக போர்க்குணம் கொண்ட நாட்டின் சந்தையில் இருந்து வெளியேறினால், அவர்கள் எங்களுக்கு உதவ முடியும். மாஸ்கோ மீது வலுவான, கடுமையான தடைகளை தொடர்ந்து விதித்து அதனை பலவீனப்படுத்த போராட வேண்டும் என கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஜெலன்ஸ்கி கூறும்போது, இந்த நிறுவனங்கள் உக்ரைனிய சந்தையில் ஒரு நல்ல இடம் பிடிக்க முடியும். போரால் உருக்குலைந்த நாட்டில் அலுவலகங்களை கட்டி உக்ரைனிய பொருளாதாரம் மேம்பட செய்யலாம். போரால், வேலை மற்றும் வீடு இழந்த உக்ரைன்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என கூறியுள்ளார்.

  • 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல்
    9 Jun 2022 4:26 AM GMT

    400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல்

    கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

    டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பாக்முட்டில் பள்ளி மற்றும் அதன் நிர்வாக கட்டிடம் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலில் உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேதமடைந்த கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணி மேற்கொள்கின்றனர்.

  • 9 Jun 2022 4:20 AM GMT

    கீவ்,

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

    இந்த போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன. இந்நிலையில், மரியுபோல் நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆண்டிரியுசெங்கோ கூறும்போது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 வானளாவிய கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.

    அவற்றில் 2 கட்டிடங்களில் நடந்த தேடுதல் பணியில் 50 முதல் 100 உடல்கள் வரை மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தாக்குதலில் மரணங்கள் அதிகரித்து வருகின்றன என கூறியுள்ளார்.

    இதேபோன்று, லுகான்ஸ்க் நகர கவர்னர் கூறும்போது, சிவிரோடொனெட்ஸ்க் பகுதியை ரஷிய படைகள் பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன என கூறியுள்ளார். தொன்பாஸ் நகரின் விதியானது முடிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


Next Story