கயானா பிரதமருடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை


கயானா பிரதமருடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை
x

கயானா பிரதமர் மார்க் பிலிப்சுடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஜார்ஜ்டவுன்,

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த பயணம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

இதில் கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், கயானா பிரதமர் மார்க் பிலிப்சை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவருடன், எரிசக்தி, பேரிடரில் இருந்து மீண்டு வருவது மற்றும் தயாராகுதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கயானாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் நடந்த இந்தியா மற்றும் கயானா இடையேயான 5-வது இணை ஆணைய கூட்டத்திற்கு, அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஹக் டாட் உடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இணைந்து தலைமை தாங்கி, விவசாயம், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் மருந்து மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இருவரும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பனாமா நாட்டுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


Next Story