நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...!
நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
காத்மண்டு,
நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
7 மாகாணங்களிலும் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரதன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.