நாங்கள் போரில் இருக்கிறோம்; பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: இஸ்ரேல் அறிவிப்பு


நாங்கள் போரில் இருக்கிறோம்; பேச்சுவார்த்தைக்கு இடமில்லை:  இஸ்ரேல் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 7:20 PM GMT (Updated: 10 Oct 2023 12:24 AM GMT)

நாங்கள் ஒரு போரில் இருக்கிறோம் என்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹையாத் கூறும்போது, இந்த முறை யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

நாங்கள் ஒரு போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம்.

இஸ்ரேலிய எல்லை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் காயத்துடன் இருப்பவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.

காசாவை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் எடுத்து கொள்ளும் சாத்தியம் பற்றிய பரிசீலனை எதுவும் உண்டா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஹையத், நான் பல விவரங்களுக்குள் செல்லமாட்டேன். இஸ்ரேல் அரசு மற்றும் பாதுகாப்பு படையானது, பாதுகாப்பை மீண்டும் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யும்.

இஸ்ரேல் குடிமக்களை தாக்கும் இந்த திறனை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டிருப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story