10. திருப்பாவை - திருவெம்பாவை


10. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 26 Dec 2016 5:13 PM GMT (Updated: 26 Dec 2016 5:13 PM GMT)

திருப்பாவை நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்

திருப்பாவை

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற ஆனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


எம்பெருமான் நாராயணனை முற்பிறவி யில் எண்ணி நோன்பிருந்ததன் பயனாக இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை, பேசவும் மாட்டாயா? நறுமணம் கமழும் துளசி மாலையை அணிந்த நம் இறைவன் நாராயணனைப் போற்றி வணங்கினால், நாம் வேண்டும் வரத்தினை உடன் அளிப்பான். இப்படி ஆழ்துயில் கொள்கிறாயே. இத்தூக்கத்தைக் கும்பகர்ணனிடம் கற்றாயோ? தூக்கத்தில் அவன் உன்னிடம் தோற்றான். சோம்பலின் மொத்த உருவாகிய சோம்பல் திலகமே! வெளியே வா. வந்து வாயிற் கதவைத் திற. நாம் சென்று நம் இறைவனை நோன்பிருந்து வழிபடுவோம்.

திருவெம்பாவை

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்


கீழுலகம் ஏழையும் கடந்து, சொல்லுக்கும் எட்டாது நிற்பவை இறைவனது திருவடித் தாமரைகள். மலர்கள் நிறைந்த அவனது திருமுடி எல்லாப் பொருள்களுக்கும் முடிவாக விளங்குவது. உமாதேவியை ஒரு பக்கத்தில் வைத்திருக் கும் அவன், ஒரே வகை யான திருமேனியை உடை யவன் இல்லை.

அவன் வேதத்துக்கு முதலாக விளங்குகின்றான். விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் எவ்வளவுதான் புகழ்ந் தாலும் அவன் புகழ் குறைவதில்லை. அவன் ஆன்மாக்களுக்கு ஒப்பற்ற தோழனாக இருப்பவன், தொண்டர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவன். குற்ற மில்லாத குலத்தில் தோன்றி திருக்கோவிலில் திருத்தொண்டு புரியும் பெண்களே! அவன் ஊர் எது? அவன் பெயர்தான் என்ன? அவன் உற்றார் யார்? அவன் அயலார் யார்? அவனைப் பாடும் தன்மை தான் யாது? என்பதை சொல்லுங்கள்.

Next Story