அனுமனுக்கு வரம் அளித்த ராகு


அனுமனுக்கு வரம் அளித்த ராகு
x
தினத்தந்தி 27 Dec 2016 9:58 AM GMT (Updated: 27 Dec 2016 9:58 AM GMT)

அஞ்சனா தேவிக்கும், வாயு பகவானுக்கும் மகனாக அவ தரித்த ஆஞ்சநேயர், குழந்தையாக இருந்த போது வானில் தோற்றமளித்த சூரியனை பழம் என்று கருதி எட்டிப்பிடிக்க எண்ணினார்.

ஞ்சனா தேவிக்கும், வாயு பகவானுக்கும் மகனாக அவ தரித்த ஆஞ்சநேயர், குழந்தையாக இருந்த போது வானில் தோற்றமளித்த சூரியனை பழம் என்று கருதி எட்டிப்பிடிக்க எண்ணினார். வாயுவின் புத்திரன் அல்லவா?. அவர் எட்டிப்பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார். சூரியனையே விழுங்குவதற்காக வாயு புத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் காரணமாக சுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆஞ்சநேயர், ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டார்.

பால அனுமன் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம், சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால், ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய்விட்டது. பால அனுமனின் வீரதீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் கொடுத்தார்.

அதாவது தனக்கு உகந்த தானியமான உளுந்தால் வடை செய்து, அதனை தன் உடல் போல (பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து (மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி வழிபடுகிறார்களோ, அவரை எந்த காலத்திலும் தான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனுக்கு வரம் கொடுத்து வாழ்த்தினார். அதனால்தான், உளுந்தில் வடை செய்து அவற்றை 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள்.

Next Story