18. திருப்பாவை - திருவெம்பாவை


18. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 2 Jan 2017 7:27 AM GMT (Updated: 2 Jan 2017 7:26 AM GMT)

திருப்பாவை உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய் வந்து எங்கும்கோழி

திருப்பாவை

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்து எங்கும்கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


மதங்கொண்ட யானைக்கு நிகரான வலிமை கொண்டவனும், போர்க்களத்தில் எதிரிகளிடம் பின்வாங்காத தோள் வலிமை உடையவனுமாகிய நந்தகோபால னின் மருமகளே! நப்பின்னையே! மணம் கமழும் கூந்தலை கொண்டவளே! வாசற் கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக எங்கும் கோழிகள் கூவுகின்றன. குருக் கத்திப் பந்தலின் மேலிருந்து குயில்கள் மீண்டும், மீண்டும் கூவி அழைக்கின்றன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களை உடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னோடு சேர்ந்துபாட நாங்கள் வந்துள்ளோம். வளையல்கள் ஒலிக்க வந்து உன் தாமரை கைகளால் கதவைத் திறப்பாயாக!

திருவெம்பாவை

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.


பெண்ணே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் இறைவனின் திருப்பாதங்களை ரத்தினக்கற்கள் பதித்த மகுடத்தோடு, வானவர்கள் பணிந்து வணங்கி னர். இறைவனின் ஒளிக்கு முன் ரத்தினங்கள் ஒளி இழந்தன. அதே போல கதிரவன் தோன்றியதால் இருள் நீங்கியது. விண்மீன்கள் ஒளிமழுங்கின. இந்த இனிய வைகறை வேளையில் ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், விண்ணாகவும், மண்ணாகவும், கண் நிறைந்த அமுதாகவும் திகழும் கடவுளின் கீர்த்தியை பாடிப் பூம்புனலில் நீராடு
வோம்!

Next Story