19. திருப்பாவை - திருவெம்பாவை


19. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 3 Jan 2017 6:22 AM GMT (Updated: 3 Jan 2017 6:22 AM GMT)

திருப்பாவை குத்து விளக்குஎரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்! மைத்தடங்கண் கண்ணினா

 திருப்பாவை

குத்து விளக்குஎரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங்கண் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்!
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


பள்ளியறையின் ஒருபுறம் குத்து விளக்குகள் ஒளி வீசுகிறது. இன்னொரு புறம் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மீது மிருதுவான பஞ்சு மெத்தை. அந்தப் படுக்கையின் மீது கொத்தான மலர்களை சூடிய நப்பின்னையின் மார்பில் தலைவைத்து கண்ணன் கண் மூடியிருக்கிறான். மலர்மாலை அணிந்த கண்ணனே, இப்படி மவுனமாய் இல்லாமல் ஒரு வார்த்தை பேசக்கூடாதா? மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! உன் கணவனை ஒரு நொடிப்பொழுதும் பிரிந்திருக்க இயலாமல் அவனைத் துயிலெழுப்ப மறுக்கிறாய். நீ இவ்வாறு செய்வது சரியா? நாங்களும் உம்மைபோன்று அன்பு உடையவர்கள் தானே! அவனை எழுப்பி எங்களுக்கும் அருள்புரிய அருள்வாயாக!

திருவெம்பாவை

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்(கு) அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்குஎங் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என்ஞாயிறு எமக்கு ஏல்ஓர் எம்பாவாய்.


எங்கள் பெருமானே! உன் கையிலுள்ள பிள்ளை எனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க அஞ்சுவதால் உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றோம். எம் மார்பகங்கள் உன் அடியாராக இல்லாதவர்களின் தோள்களை தழுவாமல் இருக்க அருள் செய்வாய். எம் கரங்கள் உன்னைத் தவிர யாருக்கும் பணி செய்யவும் கூடாது. எங்களின் விழிகள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு யாரையும் பார்த்துவிடக் கூடாது. இங்கேயே இப்போதே இவற்றை நீ அருள்வாயானால் சூரியன் எத்திசையில் எழுந்தாலும் எங்களுக்கு என்ன? கவலையற்றவர்களாய் உன் நினைவை பற்றியே இருப்போம்.


Next Story