ஜென் கதைகள் : ஞானம் எங்கிருக்கிறது?


ஜென் கதைகள் : ஞானம் எங்கிருக்கிறது?
x
தினத்தந்தி 14 Feb 2017 1:30 AM GMT (Updated: 13 Feb 2017 10:03 AM GMT)

அது ஒரு பெரிய குருகுலம். பல ஜென் துறவிகள் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வந்தனர். குருகுலத்தில் இருந்த தலைமை குருவுக்கு மிகவும் வயதாகி விட்டது.

து ஒரு பெரிய குருகுலம். பல ஜென் துறவிகள் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வந்தனர். குருகுலத்தில் இருந்த தலைமை குருவுக்கு மிகவும் வயதாகி விட்டது. அதனால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அவரிடம் தலைமை சீடன் ஒருவர் இருந்தார். ஒரு நாள் தனது கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அமைதியாக அமர்ந் திருந்தார், தலைமை சீடன்.

அப்போது தலைமை குரு, அவரை அழைப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர், குருவின் அறையை நோக்கிச் சென்றார். அறைக்குள் குளிரை தாங்க முடியாமல், போர்வையால் போர்த்திய நிலையிலும் நடுங்கியபடி அமர்ந்திருந்தார் குரு. அவருக்கு எதிரில் விறகுகள் குவித்து, நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

தனது சீடனைப் பார்த்ததும், ‘உட்கார்’ என்று சைகை காட்டினார், குரு. தொடர்ந்து அவரும், படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார்.

குருவானவர் பேச்சைத் தொடர்ந்தார். ‘என்னை வயோதிகம் வாட்டி எடுக்கிறது. உடலில் தள்ளாமை ஏற்பட்டுவிட்டது. என்னுடைய சீடர்களிலேயே நீ தான் முதன்மையானவன். எனவே எனக்குப் பிறகு, இந்த குருகுலத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை நீதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார் தலைமை குரு.

அதை ஏற்றுக்கொள்வது போல், தலைமை சீடன் அமைதியாக தலையாட்டினார். இதையடுத்து குரு தன் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து சீடனிடம் நீட்டினார்.

‘இதை வாங்கிக்கொள். இது ஒரு அரிய பொக்கி‌ஷம். உனக்கு இந்த புத்தகம் நல்வழியைக் காட்டும்’ என்று கூறி அதை வழங்கினார்.

ஆனால் தலைமை சீடனோ, அதை வாங்க மறுத்தார். ‘எனக்கு இது வேண்டாம் குருவே’.

தன் சீடன் இந்த புத்தகத்தின் வலிமை தெரியாமல் மறுக்கிறான் என்று நினைத்த குரு, மீண்டும் அவனிடம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை சீடன், ‘இல்லை குருவே.. எனக்கு தேவையானதையெல்லாம் தாங்கள் எப்போதோ கற்பித்து விட்டீர்கள். இது எதற்கு?’ என்று கூறி மீண்டும் மறுத்தார்.

ஆனால் குரு, ‘அப்படிச் சொல்லாதே. இது வேத நூல். பல தலைமுறைகளாக இந்த புத்தகம், நம்முடைய மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

தலைமை சீடன் அப்போதும் குரு கொடுத்த புத்தகத்தை ஏற்கவில்லை.

உடனே குரு, தன்னுடைய சீடனைப் பார்த்து கேட்டார். ‘பசி வந்தால் உணவுக்கு என்ன செய்வாய்?’.

‘பாத்திரத்தை எடுத்துக் கொண்டு யாசகம் பெற புறப் படுவேன்’ என்றார் தலைமை சீடன்.

‘சரி.. ஒருவர் பிட்சையிடும்போது என்ன வேண்டும் என்று கேட்பாய்?’ என்று அடுத்த கேள்வியை முன் வைத்தார் குரு.

தலைமை சீடனோ, ‘எதுவும் கேட்கமாட்டேன். அவர்கள் இடுவதை பெற்றுக் கொள்வேன்’ என்றார்.

‘அப்படி உன் பாத்திரத்தில் இடப்பட்ட பிட்சையாக இதை வைத்துக் கொள்’ என்று கூறி புத்தகத்தை நீட்டினார், அந்த மடத்தின் குரு.

மவுனமாக அந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட தலைமை சீடன், அடுத்த நொடியே தன் கையில் இருந்த புத்தகத்தை அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தூக்கிப் போட்டார்.

பதறிப்போனார் குரு. ‘அடப்பாவி.. என்ன காரியம் செய்து விட்டாய்?’ என்று அலறினார்.

இப்போதும் அமைதியாக பதிலளித்தார் தலைமை சீடன். ‘பிட்சை அளித்த யாருமே, தாங்கள் போட்ட பிச்சை என்ன ஆனது என்று பார்ப்பதில்லை குருவே. அதுவும் இல்லாமல் ஞானம் என்பதே நெருப்புதானே. நெருப்பு நெருப்புடன் சேர்ந்துவிட்டது. வேதம் என்பது வெறும் எழுத்துக்கள். இவற்றிலா இருக்கிறது ஞானம்?’ என்றார் தலைமை சீடன்.

தன்னுடைய சீடன் தன்னை விடவும், பெரும் ஞானம் அடைந்தவன் என்பதை அந்த வார்த்தைகளில் இருந்து உணர்ந்து கொண்டார் குரு.


Next Story