சூழ்நிலைகளை மாற்றும் தேவன்


சூழ்நிலைகளை மாற்றும் தேவன்
x
தினத்தந்தி 14 April 2017 12:15 AM GMT (Updated: 13 April 2017 1:24 PM GMT)

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்! உங்களுக்காக மிகுந்த பாரத்தோடும், ஜெபத்தோடும் இச்செய்தியை எழுதியுள்ளேன்.

‘‘கொடூரமானவர் களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்கு பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’’ (ஏசா.25:4)

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்! உங்களுக்காக மிகுந்த பாரத்தோடும், ஜெபத்தோடும் இச்செய்தியை எழுதியுள்ளேன். இச்செய்தி நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தற்போது உள்ள உங்கள் சூழ்நிலையை வைத்து ‘கர்த்தர் எங்களோடு இல்லை என்றும், எனக்கு அவர் அற்புதங்களைச் செய்ய மாட்டார் என்றும் சோர்வான வார்த்தையைக் கூறாமல் எந்தவித பாதகமான சூழ்நிலையையும் அவர் எனக்காக சாதகமாக மாற்றுவார்’ என்ற விசுவாச எண்ணத்தோடு இச்செய்தியை வாசியுங்கள்.

சத்ருக்கள் பிடியிலிருந்து விடுதலை


‘‘மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனு‌ஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள். இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.’’ மிமி  .நாளா.20:1,2

எனக்கன்பானவர்களே, உங்களைச் சுற்றிலும் பலவிதமான சத்ருக்கள் சூழ்ந்திருக்கலாம். இவ்வுலகத்தின் அதிபதியான சாத்தான் நீங்கள் சந்தோ‌ஷமாய் இருக்காதபடி பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வந்து உங்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கலாம். எல்லா சத்ருக்களின் வல்லமையைக் காட்டிலும் மாபெரும் பலத்த வல்லமை நம் ஆண்டவரிடத்தில் உள்ளது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

நம்மில் அநேகர் கூறுவது தங்கள் வீட்டாரே எனக்கு சத்ருக்களாக இருக்கிறார்கள் என்றும், சிலருடைய அலுவலகத்தில் உள்ள உடன் வேலையாட்கள் சத்ருக்களாய் செயல்படுகிறார் கள் என்றும் மற்றும் தங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களாலும் உறவினர்கள் மூலமாகவும் சத்ருக்கள் கிரியை செய்கிறார்கள் என்றும் கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

எனக்கன்பானவர்களே! ‘சத்ருக்கள் மத்தியில் தான் ஒரு பந்தி எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ என்று தாவீது கூறினது எத்தனை உண்மை. மேலும், உங்களுக்கு விரோதமாய் பில்லி சூனிய கட்டுகள் மற்றும் மந்திரவாதங்கள் மூலமாய் பிசாசுகளை ஏவி விட்டாலும், பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வெளிப்பட்ட இயேசு ராஜா இன்றைக்கும் சர்வ வல்லமையோடு இருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

‘‘அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.’’ மிமி . நாளா. 20:3

ஆம், பிரியமானவர்களே! நம்முடைய கர்த்தர் நம்மை விடுவிக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதே வேளையில் ஒருமனப்பட்டு தேவனைத்தேட குடும்பமாய் அர்ப்பணியுங்கள். ஒருமனப்படும்போது அங்கு தேவன் இறங்கி வருவதற்கு எவ்வித தடையும் இல்லை. அவ்வாறே உபவாச நாளை நியமிக்கவும் மறவாதீர்கள். உபவாச ஜெபத்திற்கு மிஞ்சினது ஒன்றுமில்லை. பிசாசின் கிரியைகளை அழிப்பது உபவாச ஜெபம். ஆகவே உபவாசத்தோடு தேவனைத் தேடுங்கள். எல்லாவற்றிலும் மேலாக உங்கள் ஜெபம் மிகவும் முக்கியம். உங்களுக்கு ஜெபிக்கத் தெரியுமென்றாலும் எந்த சூழ்நிலையில் எந்த வார்த்தைகளைக் கூறி ஜெபிக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்கு உறுதுணையாய் இருப்பவர் நம்முடைய ஆவியானவரே. சத்ருக்களின் பிடியிலிருந்து யோசபாத் ராஜா தேவனை நோக்கி ஜெபித்த ஜெபத்தை பின்வரும் வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

‘‘எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்தத் தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது என்றான்.’’ மிமி  .நாளா.20:7,12

மேற்கண்ட வசனத்தில் தேவன் அருளின வாக்குத் தத்தத்தைப் பிடித்து யோசபாத் ஜெபித்தான். மேலும், தேவனின் மூலமாய் விடுதலை பெற நம்முடைய பெலவீனங்களை முற்றிலுமாய் அறிக்கையிட்டு நம் கர்த்தர் நமக்கு அற்புதங்களைச் செய்கிற வரைக்கும் யோசபாத்தைப் போல நம்முடைய கண்களை கர்த்தர் மேல் பதிக்க வேண்டும். இவ்வாறு நம்முடைய சகல பெவீனங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு நீங்கள் ஜெபிக்கும்போது எந்த வித சத்ருவின் போராட்டமாக இருந்தாலும் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் உங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார்.

இப்போதுள்ள சூழ்நிலையை நீங்கள் முற்றிலுமாய் மறந்து உங்களுக்காக ஒரு புதிய பாதையைத் திறப்பார் என்பதில் மன உறுதியாயிருங்கள். சத்ருக்களுக்கு விரோதமாய் யோசபாத் ஏறெடுத்த ஜெபத்தின் வலிமையால் நடந்தது என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மிமி.நாளா.20–ம் அதிகாரம் 22 சொல்லுகிறது, யோசபாத் ராஜாவிற்கு விரோதமாய் வந்த அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத் தேசத்தார் ஆகியோரை ஒருவருக்கும் விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

இதைப்போல உங்கள் வாழ்விலும் நீங்கள் உங்கள் சொந்த பெலத்தினால் யுத்தம் பண்ணாதபடி தேவனே உங்களுக்காக யுத்தம் பண்ணும்படி நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார். இப்போதிருக்கிற சகல சூழ்நிலைகளையும் முற்றிலுமாய் மாற்றி புதிய சமாதானத்தையும் சந்தோ‌ஷத்தையும் நிச்சயம் கொடுப்பார். உங்கள் சூழ்நிலைகள் மாறும்.

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54.

Next Story