அறிவோம் இஸ்லாம் : மனிதனின் மாறாத அடையாளம், கைரேகை
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனி அடையாளம் உண்டு. அதைப்போல மனிதர்களுக்கு இருக்கிற தனிப்பட்ட அடையாளமே, கைரேகை.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஒருநாள் முடிவுக்கு வரும். வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பிறகு உலகில் பிறந்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் நல்லவர்களுக்கு சொர்க்கமும், தீயவர்களுக்கு நரகமும் வழங்கப்படும்.
மனித உடல் மண்ணில் புதைக்கப்பட்டு அவற்றின் எலும்புகள் மக்கிப் போன பிறகு, மனிதன் எவ்வாறு மீண்டும் உயிர்த்தெழுப்பப்படுவான்? அப்படி அவர்கள் ஒருவேளை உயிரோடு எழுப்பப்பட்டாலும், அந்த மனிதனை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று இறை நிராகரிப்பாளர்களான மக்கா மாநகர் குரைஷிகள் அன்றே கேள்விக்கணைகளை எழுப்பினார்கள்.
‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்பும் உங்களை எழுப்புவான்) என்று (நபியே) கூறுங்கள்’’ (திருக்குர்ஆன்–17:49) என்று இறைவன் திருமறையில் பதில் கூறுகின்றான்.
முதுகெலும்பு உள்ள விலங்கு மற்றும் மனிதர்களின் உள்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்பு எலும்புகள். இந்த எலும்பு கள் உடல் உள்உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும், இடம் விட்டு இடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. நமது உடலில் தோலையும், தசையையும் நீக்கி விட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுகள் மட்டுமே. எலும்புக்கூட்டிற்கு ‘எலும்புச் சட்டம்’ என்று பெயர். உடலுக்கு ஆதாரமாகவும், தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக் கூடுகள் தான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புக்கூடுகள் தான்.
மரணித்து விட்ட மனிதனின் எலும்புகள் மட்டுமின்றி, அவனது விரல் நுனிகளையும்கூட மீண்டும் சீராக, செம்மையாக ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு என்பதை இறைவன் திரு மறையில் தெளிவுபடுத்துகிறான்.
‘‘(இறந்து உக்கிப்போன, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன) அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? அன்று அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செம்மையாக்க நாம் ஆற்றலுடையோம்’’ (75:3) என்பது இறைமறை வசனம்.
எலும்புகள் மக்கிப்போனாலும் மனிதனுக்கு உயிர் கொடுப்போம் என்று உரத்த குரலில் கூறும் இறைவன், குறிப்பாக விரல் நுனி குறித்து கூறுவதன் காரணம் என்ன?
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனி அடையாளம் உண்டு. அதைப்போல மனிதர்களுக்கு இருக்கிற தனிப்பட்ட அடையாளமே, கைரேகை.
உலகில் வாழுகின்ற காலம் வரையில் ஒரு மனிதனின் கைரேகையில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்த உலகில் சுமார் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு மனிதரின் கைரேகை, இன்னொரு மனிதருக்குப் பொருந்தி வராது. இதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் கைரேகைகளும் சரி, இனிமேல் பிறக்கப்போகிற குழந்தைகளின் கைரேகைகளும் சரி, ஒன்றுக்கொன்று பொருந்தாது. அதனால்தான் ‘ஆதார்’ அட்டைகளில் ஆதாரமாக கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன.
தாயின் கருவில் இருக்கும்போதே உருவாகும் கைரேகை, ஆயுள் காலம் வரை மாறாது; மறையாது. ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், ஒரு குழந்தையின் கைரேகை இன்னொரு குழந்தைக்குப் பொருந்தாது.
‘கைரேகை என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரை’ என்று தடயவியல் அறிஞர்கள் வர்ணித்துள்ளனர்.
கைரேகை மூலம் மனிதர்களை அடையாளம் காண்பதற்கான முறையை சர் பிரான்சிஸ் கால்டன், சர் எட்வர்டு ஹென்றி ஆகியோர் உருவாக்கினார்கள். இந்த முறை 1901–ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப்பட்டது.
கைரேகைகளை மீண்டும் படைப்போம் என்று சொல்வதன் மூலம் மனிதர்களின் தனித்த அடையாளத்தையும், தனது வல்லமையையும் இறைவன் நிரூபித்துக் காட்டுகிறான்.
‘‘யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகி விடும் போதெல்லாம் அவையல்லாத (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பரிபூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்’’ (4:56) என்பது திருக்குர்ஆன் வசனம்.
இதன் மூலம் ‘நரகவாசிகளின் தோல்கள் கருகும்போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம்’ என்று இறைவன் கூறுகின்றான்.
உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மூளையில்தான் உள்ளது என்று தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதைப்போல வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருக்கிறது என்பதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் டாக்டர், தீக்காயங்களின் அளவைக் கண்டறிய குண்டூசியால் குத்திப் பார்க்கிறார். நோயாளி வலியை உணரும் நேரத்தில் டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம், தீக்காயங்கள் மேலோட்டமானவை என்றும், தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் பழுதுபடவில்லை என்பதையும் பழுதற புரிந்து கொள்கிறார். இதற்கு மாறாக அந்த நோயாளி வலியை உணரவில்லை என்றால், தீக்காயம் ஆழமாக உள்ளது என்பதையும், வலி உள்வாங்கி கள் சேதம் அடைந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். தோலில் அமைந்துள்ள இந்த வலி உள்வாங்கிகள் இல்லாவிட்டால் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்து கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து, தாய்லாந்தில் உள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் உடல்கூறு துறைத் தலைவர் பேராசிரியர் தேஜாசென் நீண்ட நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆராய்ச்சி முடிவில், ‘‘1,400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் உண்மையே. அவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்று முடிவாகக் கூறினார். சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற எட்டாவது மருத்துவ மாநாட்டில் பேராசிரியர் தேஜாசென் மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைந்தார்.
Next Story