நமக்குள் இருக்கும் இறைவன்


நமக்குள் இருக்கும் இறைவன்
x
தினத்தந்தி 18 April 2017 8:03 AM GMT (Updated: 18 April 2017 8:02 AM GMT)

‘இறைத் தூதர் என்பவர் வேறு எங்கும் இல்லை. நம்முள்ளே தான் ஒளிந்திருக் கிறார்’ என்ற தத்துவம் அவருக்கு புரியத் தொடங்கியது.

மயமலையில் ஒரு அற்புத மகான் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் விழித்த அவர் முன்பு ஒருவர் அமர்ந்திருந்தார்.

எதிரில் இருந்தவர் மகானை பணிவுடன் வணங்கினார்.

‘ஐயா! நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தின் தலைவராக இருக்கிறேன். என் மனம் இப்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளது. அதனால் தங்களைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் புறப்பட்டு வந்தேன்’ என்றார்.

‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார் மகான்.

‘சுவாமி! எங்கள் மடம் புராதனம் மிக்கது. பழமையின் பெருமை கொண்டது. மட£லயம் எப்போதும் இறை வழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த மடாலயத்தை தேடி வருவார்கள். ஆனால் அந்த நிலை இப்போது மாறி விட்டது. ஆன்ம ஞானத்தை நாடுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் யாரும் எங்கள் மடத்தை நாடி வருவதில்லை. இங்கு இருப்பதும் ஒரு சில துறவிகளே. அவர்களும் கூட சிரத்தையின்றி, ஏனோ, தானோவென்று தம் கடமைகளை ஆற்றி வரு
கிறார்கள். இதற்கு என்ன காரணம்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? என்று கேட்டுப் போகவே உங்களிடம் வந்தேன்’ என்றார் அந்த மடாலயத்தின் தலைவர்.

அவரது குரலில் இருந்த வருத்தத்தையும், வேதனையையும் கண்ட மகான், ‘உங்கள் மடாலயத்தின் இந்த நிலைக்கு, அறியாமை என்ற வினையே காரணம்’ என்றார்.

மடாலயத் தலைவர், ‘அறியாமையா?’ என்றார் வியப்புடன்.

‘ஆமாம்.. உங்கள் கூட்டத்தின் நடுவே ஒரு இறைத் தூதர் இருக்கிறார். அவரை நீங்கள் அறியவில்லை. அதை அறிந்து கொண்டால், உங்கள் மடாலயத்தின் குறைகள் எல்லாம் விலகிவிடும்’ என்று கூறிவிட்டு மீண்டும் தியானத்தில் மூழ்கிவிட்டார்.

மடாலயத் தலைவர் ஊர் திரும்பினார். ஆனால் அவருக்குள் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. ‘யார் அந்த இறைத் தூதர்?’ என்ற கேள்வி அவரை துளைத்தெடுத்தது. அந்த மகான் கூறியது பற்றி தன்னுடைய மடத்தில் இருந்த அனைவரிடமும் கூறினார்.

இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவநம்பிக்கையுடனும், அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘இவராக இருக்குமோ? அவராக இருக்குமோ? யார் அந்த இறைத் தூதர்’ என்று தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தொடங்கினர். யார் அந்த தேவ தூதர் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், அன்று முதல் ஒருவரையொருவர் மரியாதையாகப் பார்க்கத் தொடங்கினர். ஒருவர் மற்றவரை, இறைத் தூதராக எண்ணி பணிவுடனும், மதிப்புடனும் நடத்தினர்.

இதனால் அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாக மாறியது. அங்கு வந்தவர்கள், மகிழ்வுடன் இங்குள்ள சூழ்நிலையைப் பற்றி பலரிடமும் கூற, மேலும் பலர் ஆர்வமுடன் இந்த மடத்தைத் தேடி வரத் தொடங்கினர்.

இப்போது மடாலயத்தின் தலைவர், மகான் சொன்னதை நினைவு கூர்ந்தார். ‘இறைத் தூதர் என்பவர் வேறு எங்கும் இல்லை. நம்முள்ளே தான் ஒளிந்திருக் கிறார்’ என்ற தத்துவம் அவருக்கு புரியத் தொடங்கியது.

Next Story