14. சகோதரர்களோடு சமாதானம்


14. சகோதரர்களோடு சமாதானம்
x
தினத்தந்தி 30 May 2017 7:22 AM GMT (Updated: 30 May 2017 7:22 AM GMT)

இந்த வாரம் சிந்திக்கத் தூண்டும் நற்செய்தியைப் புனைந்திருப்பவர், ‘புனித மத்தேயு’ என்ற நற்செய்தியாளர்.

ந்த வாரம் சிந்திக்கத் தூண்டும் நற்செய்தியைப் புனைந்திருப்பவர், ‘புனித மத்தேயு’ என்ற நற்செய்தியாளர்.

அந்தக் காலத்தில் இயேசு பிரான், தம் சீடரை நோக்கிக் கூறினார்:

“மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட, உங்கள் நெறி சிறந்ததாக இருக்கட்டும். இல்லாவிட்டால் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். கொலை செய்யாதே! கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் என்று முற்காலத்தில் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்”.

“ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ, ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். ‘அறிவிலியே’ என்பவர், எரி நரகத்திற்கு ஆளாவார்”.

“ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலி பீடத்தில் செலுத்த வரும்பொழுது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு கூர்ந்தால், அங்கேயே பலி பீடத்தின் முன், உங்கள் காணிக்கையை வைத்து விட்டு, முதலில் அவரிடம் போய் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் எதிரி, நடுவரிடம் உங்களை ஒப்படைத்து விடுவார். நடுவர், காவலரிடம் ஒப்படைப்பார். நீங்கள் சிறைக்குள் அடை படுவீர்கள். கடைசி காசு வரை, திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இயேசு பிரானின் இந்த வாசகத்தை மேலும் ஆழமாகப் படியுங்கள். அவர் பழைய ஏற்பாட்டின் நிகழ்வையும், புதிய ஏற்பாட்டின் செயலையும் விளக்கமாக எடுத்துரைக்கிறார். கொலை செய்தால், முற்காலத்தில் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக வேண்டும். புதிய ஏற்பாட்டின்படி, கொலைக்கு காரணமான சினம் கொண்டாலே, தண்டனை உண்டு என்கிறார்.

எல்லாவற்றுக்கும் காரணம் ‘சினம்’ தான். திருவள்ளுவர்கூட, ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்கிறார். அதாவது, சினம் என்பது தம்மைச் சார்ந்தவரைக் கொல்லும் நெருப்பு’ என்கிறார்.

‘ஆறுவது சினம்’ என்றாள், அவ்வைப் பாட்டி. இதைத்தான் இயேசு பிரான் அன்றே எடுத்தியம்பி இருக்கிறார். தன் சகோதர, சகோதரிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர்களை, ‘முட்டாள்’ என்றும், ‘அறிவற்றவர்கள்’ என்றும் கூறக்கூடாது என்கிறார். அப்படியெல்லாம் சொன்னால் தண்டிக்கப்படுவீர்கள். எரி நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்றும் கூறுகிறார்.

பலி பீடத்தில் காணிக்கை செலுத்த வரும்போது, தூய்மையாக வா; சமாதானமாக வா. யாரோடும் பகை கொண்டு வராதே! பீடத்தின் அருகில் அருகில் வரும்போது, உன் சகோதரன், சகோதரியோடு மனத்தாங்கல் இருந்தால், பீடத்தில் காணிக்கையை வைத்து விட்டு, முதலில் பகை கொண்டோரிடம் உறவாடி விட்டு, பிறகு வந்து காணிக்கையைச் செலுத்து என் கிறார்.

எதிரி, உங்களை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் செல்லும் பொழுது, முதலில் அவனோடு சமாதானம் செய்து கொள் என்கிறார். இல்லையென்றால் தப்ப முடியாது என்கிறார். இறுதிக் காசு உள்ளவரை அதைச் செலுத்தி விட்டுத்தான் வர முடியும் என்றும் கூறுகிறார்.

இந்த வாசகம் உணர்த்துவது என்ன? முற்றிலும் சமாதானத்தை விரும்புபவராக இயேசு பிரான் காட்சி தருகிறார். இவ்வுலகில் மனித சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், சினம் கொள்ளாமல், சகோதர சகோதரிகளை மதித்தும், அவர்களோடு சமாதானம் கொண்டும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

முதலில் இயேசுவைப் பின்பற்றுவோர் இவற்றை ஏற்று நடக் கிறார்களா? அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவோராக இருக்கிறார்களா? பிறருக்கு முன்மாதிரியாக வாழ்கிறார் களா? என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பீடத்தில் காணிக்கை செலுத்துவது முக்கியமானது என்றாலும், அதைவிட முக்கியமானது மனத்தாங்கல் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நம்மோடு உறவாடவும், உரையாடவும் கூடிய சகோதர சகோதரிகளோடு மனத்தாங்கல் இருக்கக் கூடாது என்கிறார். அவர்கள் மேல் கோபம் கொள்ளக் கூடாது; அவர்களை இழிவாகப் பேசக்கூடாது; அவர்களை முட்டாள் என்றும் அறிவற்றவர்கள் என்றும் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் எரிகிற நரகத்திற்கு ஆளாகி விடுவீர்கள் என்கிறார்.

முதலில் சகோதர சகோதரியோடு உறவாடு. பிறகு உன் காணிக்கையைச் செலுத்து என்பதற்குப் பொருள் என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம். அன்புடனும், நட்புடனும் வாழ்ந்தால்தான் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். ஒருவர் மற்றவரோடு இணக்கமாகவும் வாழ முடியும்.

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள நடை முறைப் பழக்கங்களில் ஒன்றை, எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். கொலை செய்தால், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பது பழைய ஏற்பாட்டின் முறையாகும். கொலைக்குக் காரணமாக இருக்கக் கூடிய சினத்தைக் கொண்டாலே தண்டனை உண்டு என்பது புதிய ஏற்பாட்டின் கோட்பாடாகும்.

கொலை செய்வதற்கு முன் ஏற்படும் கோபம் மிகவும் மோசமானது. கொலை செய்யத் தூண்டுவது கோபம் என்பதை இக்காலத்திலும் பல்வேறு நிலைகளில் உணர முடிகிறது. ஆகவே கோபம் கொள்ளாதே என்ற கருத்தை வலியுறுத்த, அதற்கு உரிய சட்டம் என்ன? என்பதை கூறும் வகையில் கோபத்திற்கே தண்டனை உண்டு என்று கூறுகிறார்.

கோபத்தை அடக்கினாலே எல்லாம் சரியாகி விடும். சமாதானமும் அன்பும் பெருக்கெடுத்து ஓடும்.

இந்த நற்செய்தியின் வாசகத்தை மீண்டும் மீண்டும் படிப்போம். பிறருக்கும் எடுத்துரைப்போம். அன்பையும், சமாதானத்தையும் அகிலம் முழுவதும் பரப்ப உழைப்போம்.

(தொடரும்)

Next Story