83. உன்னத மார்க்கம் இஸ்லாம்


83. உன்னத மார்க்கம் இஸ்லாம்
x
தினத்தந்தி 20 Jun 2017 12:00 AM GMT (Updated: 19 Jun 2017 12:04 PM GMT)

வேறு மதங்களோடு ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கம் வேறுபட்டது; ஒப்பற்றது. ‘‘வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை–அல்லாஹ்வைத் தவிர! முகம்மது நபி அவனது திருத்தூதர்’’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

அறிவோம் இஸ்லாம்

- பாத்திமா மைந்தன்

வேறு மதங்களோடு ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கம் வேறுபட்டது; ஒப்பற்றது.

‘‘வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை–அல்லாஹ்வைத் தவிர! முகம்மது நபி அவனது திருத்தூதர்’’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கக்கூடாது என்பதே இஸ்லாத்தின் தலையாய கொள்கையாகும்.

வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டும் தான் என்பதில் இஸ்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

‘‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்’’ (4:48) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

‘இறைவன் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தன்னைச் சாதாரண மனிதனாகவே எண்ணினார்கள்.

‘‘முகம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கிறார்கள்’’ (3:144) என்றும்,

‘‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி (இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!’’ என்றும் திருமறை (18:110) தெரிவிக்கிறது.

இறைவனின் வாக்கு, தன் வாயிலாக இறங்கியதற்குத் தான் ஒரு கருவி என்ற கருத்தையே நபிகளார் கொண்டிருந்தார்கள்.

‘‘இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது’’ என்பதை வலியுறுத்திய நபிகளார், எந்த நிலையிலும் தனது உருவத்தை நிலைநிறுத்த நினைக்கவில்லை. வருங்காலம் கையில் தனது உருவம் கிடைத்தால் கடவுளாக்கி விடுவார்கள் என்று கருதியே தனது உருவப் படத்தை உருவாக்கவில்லை. தோழர்கள் சிலர் நபிகளாரின் காலில் விழ முன்வந்தபோது அதை நபிகளார் தடுத்து விட்டார்கள். காலில் விழும் கலாசாரம் இஸ்லாத்தில் இல்லை என்பது அதன் உன்னதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலகில் அநியாயங்கள் அதிகரிக்கும்போது, அக்கிரமங்கள் உக்கிரம் அடையும்போது கடவுள் மனித அவதாரம் எடுத்து உலகிற்கு வருகிறான் என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘‘இறைவன் ஒருவனே! அவன் தேவையற்றவன்; அவன் யாரையும் பெறவும் இல்லை; யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு ஒப்பாரும் இல்லை. அவனை மிக்காரும் இல்லை’’ (112:1–4) என்பது இறைவசனம்.

எனவே மக்களுக்கு வழிகாட்ட இறைவன் அந்த மக்களில் ஒருவரையே தனது தூதராக நியமிக்கிறான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆதித்தூதர் ஆதம், இப்ராகீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், மூஸா, ஈசா, நூஹ் போன்ற எந்த இறைத் தூதர்களையும், இஸ்லாத்துக்கு முன் தோன்றிய மதங்கள் பெருமைப்படுத்தவில்லை. ஆனால் அவர் களைப் போற்றி ஏற்றுக் கொண்ட ஒரே மார்க்கம், இஸ்லாம். இது அதன் உன்னதத்திற்கு இன்னொரு சான்று.

இயற்கையோடு இயைந்த மார்க்கம் இஸ்லாம். இதனால் இயற்கைக்கு எதிரான எந்த செயலையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பசி, தாகம் போன்றே உடல் இச்சையும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. இதனால்தான் இஸ்லாம் துறவறத்தை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் உடலை வருத்தும் எந்தக் காரியத்தைச் செய்யவும் இஸ்லாம் உடன்படவில்லை.

உலகில் உள்ள எல்லா மதங்களும் விவாகரத்துக்கு எதிரானவை. ஆனால் இதில் இஸ்லாத்தின் நோக்கமே வேறு. அனுமதிக்கப்பட்ட காரியங்களில் இறைவன் வெறுக்கும் செயல், விவாகரத்து. தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒன்று சேர முடியாத நிலை நிலவும்போது பிரிவது நல்லது என்று இஸ்லாம் கருதுகிறது.

இஸ்லாத்தை பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். ஒப்பந்தம் என்பதற்கு உடன்பாடு என்ற பொருளும் உண்டு. ‘உடன்பாடு உடையவர், உடன்பட்டோராம்’ என்பது தொல்காப்பியம். ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய உடன்பட்ட காரணத்தினால்தான் அவர்களுக்குள் திருமண உடன்பாடு ஏற்பட்டது. இப்போது அவர்கள் ஒன்றாக இருக்க உடன்படவில்லை. கட்டிக் கொண்டோம் என்பதற்காக காலமெல்லாம் கட்டிக் கொண்டு கவலைப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் விவாகரத்துக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. இது வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது.

இதைப்போலவே கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்யும் உரிமை, பெண்களுக்கு இஸ்லாம் அளித்த சமூக உரிமைகளில் மிக முக்கியமானதாகும். உலகத்தில் பெண்களுக்கு முதன்முறையாக சொத்துரிமை வழங்கியதும் இஸ்லாம்தான்.

வணக்க வழிபாடுகளையும், வாழ்க்கையையும் இஸ்லாம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. வணிகம் செய்வதும் வணக்கமே; இல்லறமும் ஒரு வணக்கமே. தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகியவைகளும் வணக்கங்களே என்கிறது, இஸ்லாம். எப்படி உண்ண வேண்டும், எப்படி நீரைப் பருக வேண்டும், எப்படி உறங்க வேண்டும், எப்படி உடுக்க வேண்டும், எப்படி உடல் நலம் பேண வேண்டும்? என்பன போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது. காலை விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்வதாலேயே அது உன்னத மார்க்கம்.

(தொடரும்)

Next Story