கோபம் கெட்டதா?


கோபம் கெட்டதா?
x
தினத்தந்தி 23 Jun 2017 12:15 AM GMT (Updated: 22 Jun 2017 10:18 AM GMT)

இயேசு கிறிஸ்து என்று நினைத்தவுடன் எப்படிப்பட்ட பிம்பம் நினைவுக்கு வருகிறது?. தொழுவத்தில் சிரிக்கும் பாலகனா?, கருணை வழியும் கண்களுடன் சாந்தமாய் நிற்கும் இளைஞனா? சிலுவையில் தொங்கும் மனிதரா?

யேசு கிறிஸ்து என்று நினைத்தவுடன் எப்படிப்பட்ட பிம்பம் நினைவுக்கு வருகிறது?. தொழுவத்தில் சிரிக்கும் பாலகனா?, கருணை வழியும் கண்களுடன் சாந்தமாய் நிற்கும் இளைஞனா?, சிலுவையில் தொங்கும் மனிதரா? இவற்றில் ஒன்று தான் பொதுவாகவே நமது சிந்தனையில் வரும்.

எப்போதேனும் கோபத்தில் முறைக்கும் இயேசுவின் முகம் நினைவுக்கு வருமா? சாட்டையைப் பின்னி மக்களை ஓட ஓட விரட்டியடிக்கும் வன்முறை காட்சி நினைவுக்கு வருமா? ரொம்ப சந்தேகம் தான். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் இயேசுவின் பிம்பம் அப்படி!

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ என்பது இயேசுவின் போதனைகளில் மிகவும் பிரபலமானது. அதே போல தான் ‘எதிரியையும் நேசி’ எனும் போதனையும்.

அடிக்கடி தனது போதனைகளில் ‘கோபம் கொள்ளாதீர்கள்’ என இயேசு எச்சரிக்கவும் செய்தார். கோபம் கொள்ளாதீர்கள் என மக்களுக்கு போதனை வழங்கிய இயேசு கோபம் கொண்டார் என்பது முரணாகத் தோன்றும். ஆனால் அவருடைய கோபத்தின் நிகழ்வுகளை சிந்திக்கும் போது எந்தெந்த இடங்களில் நாமும் கோபப்பட வேண்டும் என்பது நமக்குப் புரியும்.

‘சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ என்கிறது பைபிள். சினம் பாவத்துக்கு நம்மை அழைத்துச் செல்லக் கூடாது. எது சரியான கோபம், எது தவறான கோபம் என்பதை இயேசுவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

சரியான கோபம்

1.     ஏழைகளை வாட்டி வதைப்பவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அவர்களை நோக்கி தனது கோபப்பார்வையை வீசி எச்சரித்தார். ஏழைகளின் நலனுக்காக எழுகின்ற கோபம் நியாயமானது!

2.    இரக்கமற்ற கடின மனங்களைக் கண்டபோது இயேசு கோபம் கொண்டார். பிறருடைய நலனுக்கும், வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இரக்கமற்ற மனநிலையின் மீது கோபம் கொள்வது நியாயமானது!

3.    மனிதநேயத்தை விட, மத சட்டங்களே முக்கியம் என முரண்டுபிடிப்பவர்கள் மீதும், வெளிவேட மதவாதப் போக்கின் மீதும் இயேசு கோபம் கொண்டார். மனிதநேயத்தை மறுதலிக்கும் இடங்களில் கோபம் கொள்வது நியாயமானது!

4.     கர்வம் கொண்டு நடந்தவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அத்தகைய மக்களைப் பின்பற்ற வேண்டாம் என இயேசு போதித்தார். தாழ்மைக்கு எதிராய் இருக்குமிடத்தில் எழுகின்ற கோபம் நியாயமானது.

5.    இறைவனின் ஆலயத்துக்கோ, மகிமைக்கோ களங்கம் விளைவிக்கும் இடங்களில் எழுகின்ற கோபம் நியாயமானது! ஆலயத்தை விற்பனைக் கூடமாக்கிய மக்களை இயேசு அடித்து விரட்டினார்.

தவறான கோபம்

1.    நம் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், கேலிகள், வன்முறைகளுக்காக கோபம் கொள்வது தவறானது. இயேசு தன்னை கிண்டல் செய்து, அடித்து, கொலை செய்தவர்கள் மீதும் கோபம் கொள்ளவில்லை.

2.    தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என்பதனால் இயேசு கோபம் கொள்ளவில்லை. மனம் வருந்தினார். தன் தரப்பு நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதற்காக கோபம் எழுவது தவறானது.

3.    பிறர் என்னதான் தூண்டினாலும் கோபம் கொள்வது தவறு. இயேசுவின் பொறுமையை பரிசேயர்கள் எவ்வளவோ சோதித்தனர். எனினும் இயேசு கோபம் கொள்ளவேயில்லை.

4.    இயேசுவின் கோபம் மக்களுடைய மனநிலையை மாற்றுவதற்காக மட்டுமே இருந்தது. மக்கள் மீது அவர் எப்போதும் கோபம் கொண்டிருக்கவில்லை. அவர்களை நேசித்தார். தனி மனித விரோத சிந்தனைகளோடு எழுகின்ற எந்த கோபமுமே தவறானது.

5.    பாவச்செயல்களை செய்யத்தூண்டுகின்ற எந்த கோபமும் தவறானது. அது குழந்தைகளை எரிச்சலில் அடிப்பதானாலும் சரி, செல்வந்தனிடம் கொள்ளையடிப்பதானாலும் சரி!

இயேசு கோபம் கொண்டார்! ஆனால் தன் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் அவர் கோபம் கொள்ளவில்லை. ஏழைகள் ஏமாற்றப்பட்ட போதும், போலித்தனம் தலைதூக்கியபோதும், இறைவனின் தூய்மை கேள்விக்குள்ளான போதும் அவர் கோபமடைந்தார்.

நாம் கோபம் கொள்ளும் சூழல்களை சிந்தித்துப் பார்ப்போம். பெரும்பாலானவை நம்மையோ, நம் குடும்பத்தையோ, நமது நட்பு வட்டாரத்தையோ பாதிக்கும் வி‌ஷயங்களுக்காகவே இருக்கும்! ஏழைகளுக்காகவோ, மனித நேயத்துக்காகவோ எழுந்ததாய் இருக்காது! அடுத்த முறை நம் கோபத்தை பரிசீலிப்போம்.  

சேவியர், நல் மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

Next Story