கிரக தோ‌ஷங்களை நீக்கும் கஜாரண்யேஸ்வரர்


கிரக தோ‌ஷங்களை நீக்கும்  கஜாரண்யேஸ்வரர்
x
தினத்தந்தி 1 Aug 2017 1:45 AM GMT (Updated: 31 July 2017 1:13 PM GMT)

தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இன்றும் அவர்கள் பெயரை நாம் மறக்காதபடி செய்து வருகின்றன.

மிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இன்றும் அவர்கள் பெயரை நாம் மறக்காதபடி செய்து வருகின்றன.

திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண்நாவல் மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன. இதைக்கண்ட சிலந்தி ஒன்று பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா என்று எண்ணிய சிலந்தி அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமான் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் பின்னி அந்த காய்ந்த இலைகள் சிவபெருமான் மேல் விழாமல் தடுத்தது.

அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்டு அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்தெரிந்தது. கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை துதிக்கையை தரையில் அடித்தது. யானை இறந்தது. சிலந்தியும் இறந்தது.

இருவரையும் ஆட்கொண்டார் இறைவன். இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ குல மன்னராகிய சுப தேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மன்னனே கோசெங்கட்சோழன்.

கோசெங்கட்சோழன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத, யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக்கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக்கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி யானை ஏறாத் திருப்பணி என்ற பெயர் பெற்றது. இச்சோழன் 70–க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களை ஆலயங்களை கட்டினான். தான் வழிப்பட்ட திருவானைக்கோவிலை முதலில் கட்டினான். இந்த மன்னன் கட்டிய இரண்டாவது ஆலயமே ரங்கநாதபுரத்தில் உள்ள கஜாரண்யேஸ்வரர் ஆலயம் என தல புராணம் கூறுகிறது.

ஆலய வரலாறு

சங்க கால இறுதியில் அதாவது கி.பி 3–ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் சுமார் 1750 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் எனலாம்.

அரங்கநாதபுரம் என்ற இந்த ஊர் சோழர்காலத்தில் வடக்கில்இருந்து வந்த வடராயா என்ற அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதால் வடராயமங்கலம் என்ற பெயரைப் பெற்றது. எனவே, வடராய மங்கலத்தில் உள்ள ஆனைக்கார பெருமானார் கோவில் என்பது இவ்வூரில் உள்ள கஜாரண்யேசுவரர் என்ற இந்த கோவிலையே குறிக்கும்.

இந்தப் பகுதியில் மன்னர் மாலிக்கபூர் 1311 முதல் 1371 வரை இரண்டு முறை படை எடுத்து வந்து கோவில்களை அழித்தான். அப்போது திருவரங்கம் திருவானைக்காவல் ஆகிய ஊர்களில் இருந்த உலோக மூர்த்தங்களை இப்பகுதி முன்பு காடாக இருந்த தால் இங்கு கொண்டு  வந்து மறைத்து வைத்திருந்தானாம். பின் எடுத்துச் சென்றதாக செவி வழி தகவல் ஒன்று உண்டு. திருவரங்கம் திருவானைக்காவல் ஆகிய தலங்களின் மூர்த்தங்கள் இவ்வூரில் வந்து தங்கி சென்றமையால் அவ்வூர்களின் நினைவாக 14–ம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் இவ்வூர் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் (ஆனைக்கா) என்றும் அழைக்கப்படலாயிற்று.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் கஜாரண்யேஸ்வரர் என்பது. இறைவனின் வேறு பெயர்கள் ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமானார், கஜ ஆரோகணஈஸ்வரர், திருவானேஸ்வரர் என்பது. இறைவியின் பெயர் காமாட்சி.

ஆலய அமைப்பு


ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் மேற்கு புற வாயிலையே பயன்படுத்துகின்றனர். அழகிய சுற்று மதிலைக் கொண்ட இக்கோவிலுக்கு வடபால் சிறிய ராஜகோபுரம் உள்ளது. அதன் எதிரே தீர்த்த குளம் உள்ளது.

ஒரு சமயம் இந்திரனின் ஐராவத யானை மெய்மறந்து நியமம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தது. அதைத் தேடிக்கொண்டு வந்த இந்திரன் கோபம் கொண்டு அந்த யானையின் மீது தனது வஜ்ரா யுதத்தை வீசினான். அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் அந்த வஜ்ராயுதம் கஜாரண்யத்தலத்தில் வந்து விழுந்து நின்றது. அது குத்திய இடத்தில் நீருற்று வந்தது. அதுவே வச்சிரத் தீர்த்த குளமாயிற்று. இந்திர சாபம் என்ற தீர்த்த கிணறும் ஆலயத்தின் கிழக்கு திருச்சுற்றில் உள்ளது. இந்த ஆலய தீர்த்தங்கள் இவையே. இத்தீர்த்தத்தில் நீராடி தனது செயலுக்கு வருந்தி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி பேறு பெற்றானாம் இந்திரன்.

இந்த மாடக்கோவிலின் முன் பகுதியில் இரு முன்னங்கால்களோடு நிற்கும் நிலையில் உள்ள யானையின் முகம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் எழுந்தருளியுள்ள பாங்கு அந்த யானை மீது அவர் அமர்ந்துள்ளது போலவே அமைந்துள்ளது. இதனாலயே இத்தல இறைவன் கஜஆரோகணஈஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.  காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுக்கு இவ்வூரில் யானையும் வாகனமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சம்தானே.

ஆலயத்தின் தென்திசை படிகட்டுகளில் ஏறி வடபுறம் திரும்பினால் ஆலயத்தின் சிறப்பு மண்டபத்தினுள் நுழையலாம். அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை காமாட்சி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இன் முகம் தவழ தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னை தன் மேல் இருகரங்களில் தாமரை மலரையும் கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக் கிறாள். மகா மண்டபத்தின் மத்தியில் நந்தி இருக்க அர்த்த மண்ட பத்தைத் தாண்டி உள்ள கருவறையில் இறைவன் கஜாரண்யேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக் கிறார். இறைவனின் மேனியில் நடுவே பிரம்ம ரேகை என அழைக்கப்படும் ஒரு கோடு உள்ளது. தீ ஜுவாலையின் அடிபாகம் சற்றே அகன்றும் மேலே செல்லச் செல்ல அந்த ஜுவாலை குறுகியும் செல்வது போல் அந்தக்கேடு அமைந்துள்ளதால் இத்தல இறைவன் ஜோதி சொரூபமானவர் என்கின்றனர் பக்தர்கள்.

மாடக்கோவிலின் தென்புறம் தென்முகக் கடவுளும் வடபுறம் விஷ்ணு துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு எதிரே தல விருட்சமான வில்வமரம் தழைந்தோங்கி நிற்கும் அழகைக் கண்ட காஞ்சி மகாப்பெரியவர் மனம் உருகி இக்காட்சியை பாராட்டினாராம்.

ஆலயத்தின் தென் மேற்கு திசையில் பல்லவர் கால கட்டிட அமைப்பை கொண்ட வலம்புரி விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் உள்ளது.

வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயக்கர்கள் சன்னிதியும் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான ஆலயம் இது.

வழிபாடுகள்

தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இங்கு மாதப் பிரதோ‌ஷம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, கார்த்திகை யாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு பலநூறு பக்தர்கள் சூழ அன்னாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.

நவராத்திரியின் போது அன்னையை ஒன்பது நாட்களும் விதம் விதமாக அலங்காரம் செய்வதும் அதைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதும் வழக்கமான ஒன்று.

குழந்தை பேறு கிடைக்கவும், கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், உடல் பிணிகள் தீரவும், பித்ரு தோ‌ஷம், கிரக தோ‌ஷம் நீங்கவும், பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஏழு மாதங்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் அர்ச்சனை செய்து 7–வது மாதம் இறைவன் இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம் செய்வதால் இவைகளிலிருந்து பூரணமாக விடுபடலாம் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் ஆலய கும்பாபிஷேக நாள். அன்று நடைபெறும் சிறப்பு ஹோமங்களில் ஏராளமான பேர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். அன்று அன்னதானமும் நடைபெறுகிறது.

இக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். பித்ருதோ‌ஷம் முதல் அனைத்து தோ‌ஷங்களும் விலக நாமும் ஒரு முறை ரங்கநாதபுரம் சென்று இங்கு அருள்பாலிக்கும் இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 2 கி.மீ நடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மினி பஸ் வசதி உண்டு.

–ஜெயவண்ணன்.


Next Story