ஆடிப்பெருக்கு விழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ஆடிப்பெருக்கு விழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 4 Aug 2017 10:45 PM GMT (Updated: 4 Aug 2017 7:39 PM GMT)

அம்மன் கோவில்களில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

செந்துறை,

நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டியில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்துக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா நேற்று நடத்தப்பட்டது. முன்னதாக மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மன் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களின் சேர்வை ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் ஊர்வலமாக அம்மனை கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதே போல் சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியை அடுத்த ஆண்டியப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று மாலை விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சேர்வை ஆட்டத்துடன் அலங்கார தேரில் பவனி செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கம்பத்தில், பூசாரி நெய் தீபம் ஏற்றிவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பூசாரி ஆணிகள் அடிக்கப்பட்ட மரக்கட்டை காலணிகளை அணிந்து வந்து பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி பெறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Next Story