வேண்டியதை நிறைவேற்றும் லோகாம்பிகை அம்மன்


வேண்டியதை நிறைவேற்றும்  லோகாம்பிகை அம்மன்
x
தினத்தந்தி 15 Aug 2017 1:00 AM GMT (Updated: 14 Aug 2017 1:57 PM GMT)

தன்னைத் தேடி வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாயினும், அதை உடனே நிறைவேற்றித் தரும் கோவிலாக, லோகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.

ன்னைத் தேடி வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாயினும், அதை உடனே நிறைவேற்றித் தரும் கோவிலாக, லோகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகிலுள்ள லோகனார்காவு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

இந்தியாவின் வடபகுதியிலிருந்த நகரிகர் எனும் ஆரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தெற்கு நோக்கிச் செல்ல விரும்பினர். அவர்களது குலதெய்வமான லோகாம்பிகையையும், தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்த அவர்கள், லோகாம்பிகையின் கோவிலுக்குச் சென்று, தங்களுடன் வரும்படி வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலைக் கேட்ட அவள், அவர்களுடன் வருவதற்குச் சம்மதித்தாலும், அதற்கு ஒரு நிபந்தனையையும் சொன்னாள். நகரிகர்கள் கூட்டமாகச் செல்லும் போது, அவர்களின் பின்னால் அவள் வருவதாகவும், அந்தக் கூட்டத்தினர் யாரும் அவள் வருகிறாளா? என்று பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்தால் அங்கிருந்து உடனடியாக மறைந்து சென்று விடுவேன் என்பதே அந்த நிபந்தனை.

நகரிகர்களும் அவளது நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். நகரிகர்கள் கூட்டமாகச் சென்ற போது, அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். கேரளத்திலுள்ள புதுப்பனம் எனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த அவர்கள், அங்கு தங்கியிருந்து வணிகம் செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில் ஒருநாள், அந்த ஊர்க்காரர்கள் சிலர் நகரிகர் களில் ஒருவரை ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்துப் பேசினர். அதனால், மனவருத்த மடைந்த அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பிறகு, அந்த ஊரில் தொடர்ந்து இருக்க விரும்பாத அவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்றனர்.

அவர்கள் செல்லும் வழியிலிருந்த ஓலம்பலம் எனுமிடத்தில் சில நாட்கள் தங்கினர். பின்னர் அங்கிருந்து வேறு இடம் தேடிக் கூட்டமாகச் செல்லத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தின் பின்னால், அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் பின் தொடந்து சென்றாள்.

அப்படிச் சென்ற வழியில், அங்கிருந்த கிராமத்து மக்களின் கண்களுக்கு லோகாம்பிகை தெரிந்தாள். கிராமத்தினர் நகரிகர்களிடம், உங்கள் கூட்டத்தின் பின்னால் நடந்து வரும் அழகிய பெண் யார்? எனக் கேட்டனர். நகரிகர்கள், லோகாம்பிகை விதித்த நிபந்தனையை மறந்து, தங்களுக்குப் பின்னால் வருவது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் திரும்பிப் பார்த்தனர். அடுத்த நிமிடம், அவள் யார் கண்களுக்கும் தெரியாமல் மறைந்து போனாள்.

தங்களின் குலதெய்வம் லோகாம்பிகை சொன்ன நிபந்தனையை மீறிப் பின்னால் திரும்பிப் பார்த்துத் தவறு செய்து விட்டோமே... என்று வருத்தமடைந்த அவர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிலும் தேடினர். அவர்களால் லோகாம்பிகையைக் காண முடியவில்லை.

நகரிகர்கள் கூட்டத்தின் தலைவர், “எங்களுக்குத் துணையாக வந்த தெய்வமே, எங்கள் தவறை மன்னித்து, எங்களுக்குக் காட்சியளிக்க வேண்டும், இல்லையெனில் இந்த மலையை விட்டு நாங்கள் கீழிறங்க மாட்டோம்” என்று சொல்லியபடி, அருகிலிருந்த கொடைக்காட்டு (பயங்குட்டு என்றும் சொல்கிறார்கள்) மலையின் மீது, தனது கூட்டத்தினருடன் சேர்ந்து ஏறத் தொடங்கினார்.

மலை உச்சியில் அவர்களுக்குக் காட்சியளித்த லோகாம்பிகையை அனைவரும் வணங்கித் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். பின்னர், மீண்டும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அப்போது அவள், மலையுச்சியிலிருந்து ஒரு அம்பைத் தொடுக் கும்படியும், அந்த அம்பு விழுமிடத்தில் தனக்குக் கோவில் ஒன்று கட்டும்படியும் உத்தரவிட்டாள்.அதை ஏற்ற தலைவர், அங்கிருந்து ஒரு அம்பைத் தொடுத்தார். அது மலையின் கீழ்ப்பகுதியிலிருந்த ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அந்த இடத்தில் லோகாம்பிகைக்குக் கோவில் கட்டப்பட்டது. அந்த இடம் லோகனார்காவு என்று பெயரும் பெற்றது.  

ஆலய அமைப்பு

லோகனார்காவு கோவிலில் இருக்கும் லோகாம்பிகை அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பதே அதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த அம்மனைப் பகவதியம்மன் என்றும், துர்க்கையம்மன் என்றும் அழைக்கின்றனர். இந்த அம்மன் தாய் மூகாம்பிகையின் மறு தோற்றம் என்றும் சிலர் சொல்கின்றனர்.

அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிவன் சன்னிதிக்கு எதிரில் இருக்கும் நந்தி சிறிது விலகிய நிலையிலேயே இருக்கிறது. கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவிலின் வடக்குப் பக்கம் பூரக்களி மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் திருவிழாக் காலங்களில் இம்மண்டபத்தில் அம்மனுக்குப் பிடித்தமான பூரக்களி நடனம் நடக்கிறது. இந்த நடனத்தை அம்மன் விரும்பிப் பார்ப்பதாக ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. கோவிலின்  மேற்குப் பகுதியில் ஒரு பெரிய குளமும், விஷ்ணு சன்னிதி அருகில் சிறிய குளமும் என்று இக்கோவிலுக்கு இரு குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  

வழிபாடு

இக்கோவில் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வழி படும் பக்தர்கள் எந்தக் கோரிக்கையை முன் வைத்தாலும், அம்மன் அதை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பக்தர்களும் தங்களது வேண்டுதல் நிறைவடைந்த பின்பு, இரட்டி பாயசம், வலிய வட்டலம் பாயசம் ஆகியவற்றை அம்மனுக்குப் படைத்து, நெய்விளக்கு ஏற்றி, மலர்களை அளித்து, நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.  

சிறப்பு விழாக்கள்

லோகனார்காவு கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். இவ்விழாவின் 16–ம் நாள் நகர விளக்கு வழிபாடு நடைபெறுகிறது. கடைசி 11 நாட்கள் அருகிலுள்ள கொங்கனூர் பகவதி அம்மன் கோவிலிலும் மண்டல விளக்கு விழா நடக்கிறது. கொங்கனூர் பகவதி அம்மன் லோகாம்பிகையின் இளைய சகோதரியாகக் கருதப்படுகிறார். இவ்விழா நாட்களில் தச்சொலிக்களி எனும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மலையாள நாட்காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் தொடங்கி பூரம் நட்சத்திரம் வரையிலான எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா பூரம் நட்சத்திர நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடையும். இவ்விழா நாட்களில் பூரக்களி நடனம் நடைபெறு கிறது.

புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழா நாட்களில் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி நாளில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு வழிபாடு (கிரந்த பூஜை) நடைபெறுகிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திலிருக்கும் வடகரா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா எனுமிடத்தில் அமைந் திருக்கும் லோகனார்காவு லோகாம்பிகை கோவிலுக்கு வடகரா நகரிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

–தேனி மு.சுப்பிரமணி.

லோகனார்காவு  விளக்கம்

மலையாள மொழியில் லோகம் (உலகம்) என்பது மலா (மலை), ஆர் (ஆறு) மற்றும் காவு (வயல்) ஆகியவைகளால் ஆனது என்பதை விளக்கும் வகையிலும், இந்த உலகத்தைக் காக்கும் அம்மனாக அங்கு அவர் இருப்பதை உணர்த்தும்  வகையிலும் அந்த இடத்திற்கு லோகனார்காவு என்று பெயர் ஏற்பட்டது என்கின்றனர்.

லோகனார்காவு கோவிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு அனுமதி பெற்ற பின்பே, பக்தர்கள் கோவிலுக்குள் வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  

லோகனார்காவு கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதியில் இருக்கும் பூதத்தேவர் கோவிலில் நினைவுத்திறன் அதிகரிக்கவும், தங்களது தொலைந்து போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும்படியும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

Next Story